பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/732

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

716

மகரந்த வட்டம் : ஆண் பூவில் மடல்களின் கட்கத்தில் கிளைத்த சோற்று மகரந்தக் கிளைகள் எண்ணற்ற மகரந்தப் பைகளைத் தாங்கி நிற்கும். இவற்றில் சாம்பல் நிறமான நறுமண மகரந்தம் உதிரும்.
சூலக வட்டம் : பெண் பூவில் 5-12 சூலறைகளைக் கொண்ட தொகுதியான சூலகம் உண்டாகும். சூல்-ஒரு செல் உடையது.
கனி : பருத்த சதைக்கனி. 2-4 அங். நீளமும், 6-10 அங். அகலமும் உள்ளது. மஞ்சளும், சிவப்புமான நிறமுள்ளது.

இதன் அடிமரத்திலிருந்து விழுதுகள் உண்டாகும். இதன் இலைகள் பாய், குடை முடையப் பயன்படும். மரத்தின் நார் பலவாறு பயன்படும். மலரின் மடலிலிருந்து, நறுமண எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது மருந்துக்குப் பயன்படும். இதனுடைய குரோமோசோம் எண்ணிக்கை 2n = 51, 54, 60 என ஸ்காட்ஸ் பர்க் (1955) என்பவரும், 2n = 60 என ஆர். எஸ். இராகவனும் (1959) கணித்துள்ளனர்.