பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/743

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



727

குறுந்தொகையில்,

“பாம்பு உமிழ் மணியின் தோன்றும்
 முந்தூழ் வேலிய மலைகிழவோற்கே”
-குறுந் 239 : 5-6

என்று ஆசிரியர் பெருங்கண்ணன் கூறுகின்றார். இவ்வடிகளில் வரும் ‘தோன்றுமுந்தூழ்’ என்பதைத் ‘தோன்றும், உந்தூழ்’ என்று பிரித்தே உரை கண்டார் உ. வே. சா. அகநானூற்றில் இது ‘முந்தூழ்’ என்று கூறப்படுகின்றது.

“ தேம்பிழி நறவின் குறவர் முன்றில்
 முந்தூழ் ஆய்மலர் உதிர . . . ”
-அகநா. 78 : 7-8

இங்கு ‘உந்தூழ்’ என்றிருப்பது உதிர என்று வரும் சீருக்கு நிறைவான மோனையாகும் என்பர் கோவை. இளஞ்சேரனார்.[1] இவர் கூற்று பொருத்தமானதாகவே தோன்றுகிறது. ‘முந்தூழ்’ என்பதை விட ‘உந்தூழ்’ என்பதற்குப் பொருத்தமும் உண்டு.

‘உந்தூழ்’ எனப்படும் பெருமூங்கில் பெரிய, கிளைத்த, பல்லாண்டு வாழும் புதர்ச் செடி ஆகும். இதனையும் புலவர் பெருமக்கள் புல் என்றே கொண்டனர். இது தாவரவியலுக்கும் ஒத்ததாகும்.

பெருமூங்கில் அறுபது ஆண்டுகள் வரை நீண்டு, ஓங்கி வளர்ந்து, பின்னரே பூக்கும்.

இதன் மலரை ‘ஆய்மலர்’ என்றார் நக்கீரனார். ‘உரிது நாறு அவிழ் தொத்து’ என்றார் கபிலர். இந்த அடிக்கு நச்சினார்க்கினியர் ‘தனக்கு உரித்தாக நாறும் விரிந்த கொத்தினை உடைய’ என்று பெருமூங்கிற் பூவைச் சிறப்பித்துக் கூறுவர்.

சற்று மங்கிய வெண்ணிறமாகப் பெருமூங்கில் கொத்தாகப் பூக்கும். தனக்கே உரியதான ஒரு மணத்தை உடையது. இம்மலர் பூத்துக் காய்த்துக் கனியாகி விதையுண்டாகும். இவ்விதை வெண்ணீல நிறங் கொண்டது. இதற்கு மூங்கிலரிசி என்றும் ‘அரி’ என்றும் பெயர். இதனையே பிற்காலத்தில் மூங்கில் தரும் ‘முத்து’ எனக் கொண்டனர் போலும்.

மேலும் இதற்குக் ‘கழை’ என்ற பெயரும் உண்டு. இதற்கு ‘மூங்கில்’ என்றே நச்சினார்க்கினியர் கூறுவர். இச்சொல். கரும்பையும் குறிக்கும். சங்க இலக்கியத்தில் ‘வேரல்’ என்றதொரு சொல்லும் ஆளப்படுகின்றது. இதற்குச் ‘சிறுமூங்கில்’ என்று உரை கூறுவர். ஆகவே, கழை என்பது பெருமூங்கில், சிறுமூங்கில் ஆகிய இவற்றுடன் வேறுபட்டதா என்ற ஐயம் எழுகின்றது. கழையும் மலையிடத்தில் வளரும் என்பர் புலவர்.


  1. இலக்கியம் ஒரு பூக்காடு. பக். 616