பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

59

நேரத்தைக் குறிக்கும். பல ஆயிரங் கணம் கொண்டது இமைக்கும் நேரம் என்பர். ‘கணம்’ என்னும் அணுவளவான நேரத்தை, அரபத்த நாவலர் என்னும் பரத நூல் புலவர் அளவிட்டுக் காட்டியுள்ளார்.[1] தாமரை மலரின் இதழ்களில் நூறு இதழ்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க வேண்டும். கூரிய ஊசி ஒன்றை அவ்வடுக்கின் மேல் வைத்து அழுத்த வேண்டும். நூறு இதழ்களில், முதல் ஓர் இதழில் ஊன்றும் நேரம் ஒரு கணமாம்.

திருமகள், கலைமகள், நான்முகன் முதலிய தெய்வங்கள் தாமரை மலரின் மேல் இடம் பெற்றனர் என்ப. ‘திருவளர் தாமரை’[2] என்ற சொற்றொடருக்குத் ‘திருமகள் தங்கும் தாமரை எனினும் அமையும்’ என்று உரை கூறுவர். மற்று, கருஞ்சிவப்பு நிறமுள்ள கண்ணனின் உடலும், உடல் உறுப்புகளும் தாமரை போன்றிருத்தலின் “கமலக்காடன்ன கண்ணன்” என்று போற்றும் திருவாய்மொழி.[3] புத்தர், அருகதேவர் முதலியோருக்கும் தாமரை முறையே இருப்பிடமாகவும் திருவடிக்கு உவமையாகவும் கூறப்படும்.

கடவுளரது உறுப்புகளையெல்லாம் தாமரையாகக் கொண்டு பாடியவர்கள், மாந்தரின் உறுப்புகளையும் அங்ஙனம் கூறாமல் இல்லை. முகம், கை, கன்னம் முதலிய புற உறுப்புகள், தாமரை மலருக்கு உவமையாக்கப்பட்டுள்ளன. இதயமும் தாமரை மொட்டுக்கு உவமிக்கப்படுகிறது.

தாமரை மருத நிலத்திற் சிறந்த மலராகும். ஆனால், மருத நிலம் மருத மரத்துப் பூவின் பெயரால் மருதம் எனப் பெயர் பெற்றது. ஆயினும், மருதமரப் பூவைக் குறித்தோரைச் சங்க இலக்கியத்தில் காண இயலவில்லை. அதனால், தாமரையை மருத நிலத்து மலராகக் குறிப்பிட்டுள்ளது இறையனார் களவியலுரை.


  1. “நூற்றிதழ் அடுக்கி அதனில் துன்னூசி ஊன்றிடும் காலம் கணமாம்”-பரத நூல்
  2. திருச்சிற்றம்பலக் கோவை : 1
  3. திருவாய் 9:7:3 -பழம்பாடல்