பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/763

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

வேழம்
சக்காரம் அருண்டினேசியம்
(Saccharum arundinaceum, Retz.)

சங்க இலக்கியப் பெயர் : வேழம்
உலக வழக்குப் பெயர் : வேழக்கரும்பு, பேய்க்கரும்பு கொறுக்காந் தட்டை
தாவரப் பெயர் : சக்காரம் அருண்டினேசியம்
(Saccharum arundinaceurm, Retz.)

வேழம் இலக்கியம்

வேழம் என்பது இக்காலத்தில் ‘கொறுக்காந்தட்டை’ என்று வழங்கப்படும். வேழம் என்பது மூங்கில், கரும்பு, யானை முதலிய பொருள்களிலும் வழங்கப்படும். ‘வேழம்’ கரும்பிற்கு மிக நெருங்கியது எனினும் உட்கூடு உள்ளது; மெல்லியது; கரும்பு போன்று நீளமானது. தாவர இயலில் இதுவும் கரும்பும் ஒரே பேரினத்தைச் சார்ந்தவையாகும். வேழத்திலிருந்துதான் கரும்பு தோன்றியிருக்கக் கூடும் என்று கருதுவர் தாவரவியல் அறிஞர்கள். இதில் மூங்கிலைப் போல உட்கூடும் கணுக்களும் உள்ளமையின் வேழம் மூங்கிலுக்கும் பெயராதலன்றி மூங்கிலுடன் நெருங்கியது. வேழம், கரும்பு, மூங்கில் ஆகியவை புறக்காழ் உடையனவாதலின் ‘புல்’ எனப்படும். வேழம் தாவர இயலில் ஒருவகையான புல் (நாணற்புல்) ஆகும். வேழத்தின் தண்டில் உட்கூடு உண்டென்பதை ஐங்குறு நூறு கூறும்.

“நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்
 காம்புகண்டன்ன தூம்புடை வேழம்”
-ஐங். 20 : 2-3

இனிய சாற்றைக் கொண்ட கரும்பு மென் கரும்பு என்றும், சாறில்லாத நாணலை, ‘வேழக் கரும்பு’ என்றும் கூறுவர். இதனைப் பேய்க்கரும்பு என்பாரும் உளர். இவ்வேழம் மூங்கில் அமைப்பில் குச்சியாக அமைந்திருப்பதால், வீட்டுக்கூரைக்கு வரிச்சுக் கம்பாகப் பயன்படுத்தினர்.