பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/775

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



759

கதிர் சுவையுடையதென்றும், புறாவின் கருவைப் போன்றது வரகு என்றும், நீண்ட பூங்கொத்தையுடைய பூளைப் பூக்களை ஒத்தது வரகுக் கதிர் என்றும், வரகை உரலிலிட்டு நன்கு குத்தி வரகு அரிசியாக்கி பால்விட்டுப் பொங்கிச் சோறாக்கித் தேனொடு உ ண்பர் என்றும், வரகுக் கதிரை மயில், மான் முதலியவை உண்ணும் என்றும், வரகு வைக்கோலைக் கொண்டு கூரை வேய்வர் என்றும் சங்க நூல்கள் கூறுகின்றன.

“பழமழைக் கலித்த புதுப்புன வரகின்” -குறுந். 220 : 1
“வன்பா லான கருங்கால் வரகின்” -புறநா. 384 : 4
“கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே” -புறநா. 335 : 4

“கருங்கால் வரகின் இருங்குரல் புலர”
(குரல்-கதிர்) -மதுரைக். 272
“கவைக்கதிர் வரகின் கால்தொகு பொங்கழி” -அகநா. 393 : 5

“மாபுதல் சேர வரகுஇணர் சிறப்ப
 மாமலை புலம்ப கார்கலித்து அலைப்ப”
-ஐங். 496 : 1-2

“கவைக்கதிர் வரகின் யாணர்ப்பைந்தாள்” -அகநா. 359 : 13

“களைகால் கழீஇய பெரும்புன வரகின்
 கவைக்கதிர் இரும்புறம் கதூஉ உண்ட
 குடுமி நெற்றி நெடுமாத் தோகை”
-அகநா. 194 : 9-11
“விதையர் கொன்ற முதையல் பூழி
 இடுமுறை நிரப்பிய ஈர்இலை வரகின்
 கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை”
-நற். 121 : 1-3

“இதைப்புன வரகின் அவைப்பு மான்அரிசியொடு” -அகநா. 394 : 3

“கருவை வேய்ந்த கவின்குடிச் சீரூர்
 நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன
 குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி”
-பெரும்பா. 191-193

(கருவை-வரகின் வைக்கோல்; சொன்றி-சோறு)