பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/777

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

ஏனல்–தினை
செட்டேரியா இட்டாலிகா
(Setaria italica, Beauv.)

சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் கூறப்படுவது தினைப் புனமும், தினையும். இதற்கு ‘ஏனல்’ என்று பெயர். இது ஓராண்டுச் செடி. தினையரிசிக்காகப் பயிரிடப்படுவது.

மலைமக்கள் தினைமாவில் தேனைப் பெய்து உண்பர். விருந்தினர்க்கும் படைப்பர்.

சங்க இலக்கியப் பெயர் : ஏனல், தினை
தாவரப் பெயர் : செட்டேரியா இட்டாலிகா
(Setaria italica, Beauv.)

ஏனல்–தினை இலக்கியம்

சங்க இலக்கியங்களில் ‘ஏனல்’ என்ற சொல் தினைப்புனத்தையும், தினையையும் குறிப்பிடும். மலைப்பாங்கிலும், சிறுபுறவிலும் தினைப்புனம் பரவி இருந்தது. அதில் தினை விதைக்கப் பெற்றது. தினையின் தாள் பசுமையானது. தினை இலை நீளமானது. தினைத்தாளின் அடியில் சுற்றிலுமாகப் பசிய வேர்கள் பரவியிருக்கும். இதனைக் குருகென்னும் பறவையின் காலுக்கு உவமிப்பர். தினைப்பயிர் சூல் கொண்டு அதன் கதிர் வெளிப்படும். முற்றிய தினைக்கதிர் வளைந்திருக்கும். கதிரில் பொன்னிறச் செவ்விய தினை விளையும். இக்கதிர்கள் ஒன்றோடொன்று பிணைந்திருக்கும். இதனைத் தம்மில் விளையாடிப் பொருகின்ற யானைக்கன்றுகளின் ஒன்றொடொன்று சேர்ந்த துதிக்கைகளுக்கு உவமித்துள்ளார் பெருங்கௌசிகனார். தினைப்புனத்தை மகளிர் காத்து வந்தனர். பெரிதும் கிளிகள் தினைக் கதிர்களில் உள்ள தினையைக் கவர்ந்துண்னும், தினைப்புனத்தை யானை மேய்ந்து அழிப்பதும் உண்டு. தினைப்புனத்தைக் காப்பதற்கு மலை உச்சியில் சிறு இதணம் அமைப்பர். அதிலிருந்து