பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/779

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

763

“தோடுவளர் பைந்தினை நீடுகுரல் காக்கும்
 ஒண்தொடி மகளிர்க்கு ஊச லாக”
-அகநா. 368 : 3-4
“ஏனல் காவலர் கவண்ஒலி வெரீஇக்
 கான யானை கைவிடு பசுங்கழை”
-குறுந். 54 : 2-3
“குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த
 தொண்டகச் சிறுபறைப் பாணி அயலது
 பைந்தாள் செந்தினைப் படுகிளி ஒப்பும்
 ஆர்கலி வெற்பன்”
-நற். 104 : 4-7
“பூம்பொறி ஒருத்தல் ஏந்துகை கடுப்ப
 தோடுதலை வாங்கிய நீடுகுரல் பைந்தினை
 பவளச் செவ்வாய்ப் பைங்கிளி கவரும்”
-நற். 317 : 2-4

“தேம்படு சாரல் சிறுதினைப் பெருங்குரல்
 செவ்வாய்ப் பைங்கிளி கவர”
-நற். 147 : 2-3

ஊர் தோறும் எடுத்துக் கொண்ட விழாவின் கண்ணே தினை அரிசியைப் பூக்களோடே கலந்து, பிரப்பரிசியாக வைத்து, மறியை அறுத்து, கோழிக் கொடியை நிறுத்துவர். வேலன் வெறியாட்டு அயருங் காலை, உதிரம் அளைந்த சிவந்த தினையரிசியைப் பரப்பி, செந்நிற மலர்களைத் தூவி வழிபடுவான்.

“சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ”
-திருமு. 218-219

“உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
 குருதிச் செந்தினை பரப்பி குறமகள்
 முருகு இயம் நிறுத்து”
-திருமு. 241-243

மேலும் தினைப்புனம் தலைமகனுக்குப் பகற்குறி இடமாக அமைந்த பாடல்களும் உள்ளன. தினை அரிசி நண்டுக் குஞ்சுகளைப் போன்றதென்றும், தினை அரிசிச் சோற்றைப் பாலுடனே தொண்டமான் இளந்திரையனிடம் பெறுவீர் என்றும் பாணர்களை ஆற்றுப்படுத்துகின்றார் உருத்திரங் கண்ணனார்.

“இருங்கிணை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவீர்”
-பெரும்பா. 167-168