பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

சங்க இலக்கியத்

என்று கபிலர் கூறுதலின் ‘நறவம்’ என்பது ஒரு கொடி என்பதும் இக்கொடியே நறுமணமுடையதென்பதும் புலனாம். இதனை உட்கொண்டே நச்சினார்க்கினியர் ‘நறவம்’ என்பதற்கு ‘நறைக்கொடி’ என்று உரை கண்டார் போலும் என்று அறிய முடிகின்றது.

இக்கொடியினைச் சங்க நூல்கள் நறவம், நறை, நறா, நறவு என்ற நான்கு பெயர்களால் அழைக்கின்றன. நறா என்பது தேறலையும் குறிக்கும். இதனால் சூடும் நறவமாக மலரும், சூடா நறவமாகத் தேறலும் குறிக்கப்படும். தாவர இயலில் இதனை ஒரு புதர்க்கொடி என்பர். இக்கொடி கொத்தாகப் பூக்கும். தாவர இயலுக்கேற்ப ‘ஊழ் இணர் நறவம்’-பரிபா. 19:78 என்று கூறுவர் நப்பண்ணனார். நறவ மலரில் ஐந்து நீண்ட வெளிர் சிவப்பு நிறமான இதழ்கள் உள்ளன. இம்மலரை மகளிரது கண்ணுக்கும் கைக்கும், இதழ்களை மகளிருடைய கை விரல்களுக்கும் சங்கச் சான்றோர் உவமித்துள்ளனர். மகளிரது கருங்குவளை போன்ற கண்ணில், செவ்வரி படர்வதை இளங்கீரனார் கூறுவர். கருங்கண் சிவந்தது என்றும் கூறலாம்.

“மறவல் ஓம்புமதி, எம்மே-நறவின்
 சேயிதழ் அனைய ஆகிக் குவளை
 மாயிதழ் புரையும் மலர்கொள் ஈர்இமை”
-அகநா. 19 : 9-11
“நயவரு நறவிதழ் மதருண்கண் வாணுதல்”-பரிபா. 8 : 75
“நறவுப் பெயர்த்து அமர்த்த நல்எழில் மழைக்கண்
 மடவரல் மகளிரொடு பகல் விளையாடி”
-பெரும்பா. 386-387
“நறாஇதழ் கண்டன்ன செவ்விரற்கு ஏற்ப”-கலி. 84 : 22

மேலும், நறவம்பூ அலர்ந்தாற் போன்ற, தன்னுடைய மெல்லிய விரலையுடைய கையைத் தாங்கித் தலைவன் தன் அருளை உடைய சிவந்த கண் மறையும்படி வைத்துக் கொண்டதைத் தலைமகள் நினைவுபடுத்துகிறாள்.

“நறாஅ அவிழ்ந் தன்ன என்மெல்விரல் போதுகொண்டு
 செறாஅச் செங்கண் புதைய வைத்து”
-கலி. 54 : 9-10

சூடும் நறவத்தையும் சூடா நறவத்தையும் சேர்த்துக் கூறும் ஒரு பரிபாடல். புனலாட்டயர்ந்த தலைவி, மெய் ஈரந்தீர்ந்து வெய்தாக நுகர்தற்குக் கூடிய நறாவைப் பருகினாள். நெய்தற்