பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 185

பாலை நிலத்தில் வாழ்ந்த எயினர்கள் பாலைப் பண்ணைப் பாடி உவகையுற்றனர். இவர்கள் பாலை யாழினை மீட்டி நிரை கோட் பறையை முழக்கி மகிழ்ந்து வாழ்ந்து வந்தனர்.

இன்னணம் தமிழர் கண்ட இவ்வைம்பெரும் பண்களும் ஆதிப்பண்களாகப் போற்றப் பெறுகின்றன. இந்த ஐந்து பண்களினின்றே, தமிழர்கள் பன்னிரண்டாயிரம் பண்களைக் கண்டனர். ஆதிப் பண்கள் ஐந்தில் எதனின்று எப்பண்கள் கிளைத்தன என்று இன்று திட்டவட்டமாகக் கூறுதற்கியல வில்லை. அவைகளைப் பண்டையோர் பாடும் முறையில் பாடுவதும் அருமையாக இருக்கின்றது.

பண்டைத் தமிழர் இசை அறிஞர்கள்; பண்களைக் கண்டதோடு அமையாது அவைகளுக்குரிய காலமும் கண்டறிந்துள்ளனர். குறிஞ்சிப்பண் பாடுதற்குறிய காலம் யாமம், முல்லைப்பண் பாடுதற்குரிய காலம் மாலை, மருதப்பண் பாடுதற்குரிய காலம் விடியல், நெய்தற்பண் பாடுதற்குரிய காலம் எற்பாடு. பாலைப்பண் பாடுதற்குரிய காலம் நண்பகல் என ஆய்ந்து அறிந்துள்ளனர்.

தமிழர்களின் முன்னோர்கள் தமிழ்ப்பண்ணைத் துணைக் கருவிகளோடு இசைத்துப் பாடிவந்தனர். முல்லை நிலத் திற்குச் சென்றால் முல்லைப்பண்ணைப் பாடுவர். இவ்வாறே ஒவ்வொரு நிலமக்களும் தத்தம் நிலப்பண்களைப் பாடுவதை மரபாகக் கொண்டு வாழ்ந்தனர். ஒருவர் எந்த நிலத்திற்குப் போந்தாலும் அவ்வந் நிலத்திற்குரிய பண்ணைப் பாடுவது முறைமை என்று பத்துப்பாட்டு, மலைபடு கடாம் போன்ற பழம்பெரும் தமிழ் இலக்கியங்கள் பகர்கின்றன. ஒரு நிலத்து வாழும் மக்கள் தங்கள் வாழும் நிலத்தில் பிற பண்களைப் பாடுவது தவறன்றெனினும் ஒவ்வொரு நில மக்களும் தத்தம் பண்ணைப் பாடுதலே சிறப்பாகக் கொண்டிருந்தனர்.

சங்க-12