பக்கம்:சங்க கால மகளிர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98


இவ்வழக்கமும் தலைவி அயல் நாட்டில் துன்பம் உறக் கூடாது என்று தலைவன் நினைத்த அருள் நெஞ்சத்தினைப் பிரதிபலிப்பதாகும்.

மக்கட்பேறு

"மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர். நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்ல அணிகலன் என்றும் கூறுவர்" என்பது வள்ளுவர் வாய்மொழி.[1]

மனைக்கு விளக்கம் பெண்; பெண்ணிற்கு விளக்கம் அவள் பெறும் மக்களாவர்.

'கடவுட் கற்பொடு விளங்கும் குடும்பத்திற்கு விளக்காகிய மகனைப் பெற்றெடுத்த புகழ் மிகுந்த சிறப்பினையுடைய நல்ல மனைவி' என்று தாய்மையைப் பாராட்டுவர் இளநாகனார் என்னும் புலவர்.[2] கற்பொடு பொருந்திப் பிள்ளைகளைப் பெறும் தாயரை வாழ்த்துகிறார் ஆலங்குடி வங்கனார். [3]

மருதத்திணைப் பாடல்களில் தலைவனையும் தலைவியையும் சேர்க்கும் வாயிலாக அமைபவன் பெரும்பாலும் மகனேயாவன்?

பகலெல்லாம் பரத்தைவீடு தங்கிவிட்டுத் தலைவன் வீடு திரும்புகிறான். தலைவி கோபித்தபொழுது மறுமொழி ஒன்றும் உரையாமல், தன் மகனைத் தழுவிக் கொண்டு அவன் பக்கத்தில் படுத்து உறங்குவது போல் கிடப்பான் தலைவன். மகனிடம் நெருங்காதே, இங்கே


  1. திருக்குறள்:
  2. அகநானூறு:
  3. நற்றிணை :