பக்கம்:சங்க கால மகளிர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


சங்ககால மகளிர் இளமைக் காலத்தில் களவுக் காலத்தில் ஆணின் மனங்கவர்ந்த தலைவியாகவும், இல்லற வாழ்வில் ஈடுபட்ட காலையில் வாழ்க்கைத் துணைவியாகவும், முதிய வயதில் கணவனைக் கருத்துடன் ஓம்பும் காரிகையாகவும் விளங்கினாள். எனவேதான் தலைவியோடு தலைவன் மனங்கலந்து இணையும் திருமணம் 'துறக்க வுலகத்தின் பயிற்சிப்பள்ளி அல்லது தோட்டமாக' அமைந்தது.

'ஓர் பண்பு நிறைந்த மனைவியே அவள் தன் கணவனுக்கு விலையுயர்ந்த முடியாவாள்' என்ற விவிலிய நூலின் பழமொழிக்கொப்பச் சங்ககால மகளிர் தம் பண்புச் சிறப்பால் வீடும் விளக்கமுற்றது; நாடும் நன்மை எய்தியது எனலாம்.

இறுதியாக அதே நேரத்தில் உறுதியாகக் கூறத்தக்கது என்னவெனில் சங்ககாலத்தில் தமிழ்ச் சமுதாயத்தில் மகளிர் பெற்றிருந்த இடம் தனிச் சிறப்பு வாய்ந்தது என்பதாகும்.