பக்கம்:சங்க கால மகளிர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


குன்றத்து வாழும் குறவர் இறைவனை வேண்டிப் பாடுகிடந்து பெற்ற பெண் என்பதனால் இந்நாளைபோல் இன்றி அந்நாளில் பெண்மகவு பெற்றோரால் வரவேற்கப்பட்ட சிறப்பினை நன்கு அறியலாம்.

மகளிர் இளம்பருவ விளையாட்டுகள்

தங்கள் உடல் அமைப்பிற்கும் உள்ள நிலைக்கும் ஏற்ற விளையாட்டுகளைச் சங்ககால மகளிர் தேர்ந்தெடுத்து விளையாடினர். பூக்கொய்தல், புனல் விளையாடல், ஊசல் அயர்தல், பந்தாடுதல், மணலிற் சிறுவீடுகட்டுதல், கழற்சிக்காய், அம்மனைக்காய் முதலியவற்றைக் கையாற் பிடித்து ஆடுதல் முதலியன மகளிர் தம் இளம்பருவ விளையாட்டுக்களாகும்.

மலைவாழ் மகளிர் தினைப்புனங்களில் தினைக்கதிர்களில் வந்து படியும் கிளிகளைத் தட்டையென்ற கருவி கொண்டு ஓட்டினர், பூமாலையும் தொடுத்தனர் என்பது தெரிய வருகின்றன.

தினைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்

புனக்கிளி படியும் பூங்கட் பேதை.[1]

கவலையில் தேங்காமல், மகிழ்ச்சி மண்டிய முகத்தினராய், துள்ளலும், எழுச்சியும் நிரம்பிய வாழ்வினராய் மகளிர் சிறுசிறு விளையாடல்களில் ஈடுபட்டனர் என்பது சங்க இலக்கியங்களின் பல பாடல்களால் நன்கு புலனாகின்றது. இவ்வாறு விளையாட்டில் ஈடுபடும் மகளிர் கூட்டத்தினை அந்நாளில் ‘ஓரை ஆயம்’ என வழங்கினர். ‘ஆயம்’ என்ற சொல்லே விளையாட்டுப் பருவத்தில் நிற்கும் மகளிர் கூட்டத்தைக் குறிப்பிடும்.


  1. குறுந்தொகை: 142 : 1-2