பக்கம்:சங்க கால மகளிர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


“வீட்டின் வெளியே வந்து விளையாடவேண்டிய இளம் பருவத்து மகளிர், தம் தோழியர்களுடன் கூடி விளையாடி மகிழாது, வீட்டின் கண்ணே அடைப்பட்டிருத்தல் அறனுடைய செய்கையும் ஆகாது; அவர்கள் உடலின் ஆக்கத்தையும் சிதைப்பதாகும்” என்று சங்ககாலச் சான்றோர் சமுதாயம் வற்புறுத்தியது.

விளையா டாயமொடு ஓரை யாடாது
இளையோர் இல்லிடத் திற்செறிங் திருத்தல்
அறனும் அன்றே ஆக்கமுந் தேய்ம்மெனக்
குறுநுரை சுமந்து நறுமலர் உந்திப்

பொங்கிவரு புதுநீர் நெஞ்சுண ஆடுகம்.[1]

எனவே வீட்டில் தங்கி அறத்தினைத் தேய்க்காமல், வீட்டின் புறத்தே போந்து, “நுங்கும் நுரையுமாகப் பால்போல் கொப்புளித்துவரும் புதுப்புனலில் நெஞ்சு மகிழ நீந்தித் திளைத்து மகிழ்ந்தாடுவோம்” என்று தோழி தலைவியை அழைப்பதனைக் காணலாம்.

மேலும் மகளிர் பஞ்சாய்க் கோரைப்புல் கொண்டு செய்யப்பட்ட பொம்மையாம் பாவை கொண்டு விளையாடி மகிழ்ந்தனர் என்பதனையும் அறியலாம்.

பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும்

பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்தும்.[2]

பூந்தாது கொண்டும் பாவை செய்தல் உண்டு.

தாதிற் செய்த தண்பனிப் பாவை
காலை வருந்துங் கையா றோம்பென

ஓரை யாயங் கூறக் கேட்டும்.[3]

  1. நற்றிணை: 68. 1-5
  2. குறுந்தொகை: 276 : 1-2
  3. குறுந்தொகை: 48 : 1.3