பக்கம்:சங்க கால மகளிர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18



பெண் கல்வி

சங்ககால மகளிர் இயல், இசை, கூத்து என்னும் தமிழின் முத்துறையிலும் நல்ல தேர்ச்சி பெற்று விளங்கினர். நல்லிசைப் புலமை மெல்லியலார் பலர் அந்நாளில் திகழ்ந்தனர். ஆடவர்க்குரிய கல்வி வேறு; மகளிர்க்கு வேண்டிய கல்வி வேறு. போர், தூது, காவல், பொருளீட்டல் முதலிய துறைகளில் ஆண்மக்கள் ஈடுபட்டதனால் அதற்குரிய துறைக்கல்வியினை ஆண்மக்கள் கற்றனர். மகளிர் தம் குடும்பப் பாங்கிற்குத் துணை செய்யும் கல்வியினைப் பயின்றனர். கல்வியில் வல்ல மகனையே தாயும் விரும்பினாள்; அறிவுடையோன் ஆற்றுப்படுத்திய வழியிலேயே அரசனும் ஒழுகினான் என்பது புறநானூறு அறிவிக்கும் செய்தியாகும்,[1] மகளிர் கற்ற கல்வி அவர்தம் உடலுறுப்புக்களுக்குப் பயிற்சி தருவதாகவும் திருமணத்திற்குப் பிறகு இல்லற வாழ்வில் ஈடுபடுவதற்குத் துணை செய்யும் கருவியாகவும் அமைந்தது. குடும்பக் கல்வியினைத் தாயிடமும், செவிலித் தாயிடமும் (foster-mother) தோழியிடமும் கற்ருள். தோழி (lady-companion) செவிலியின் மகளாவள்;

தோழி தானே செவிலி மகளே.[2]

படகில் தலைவி எந்தப் பகுதியில் அமர்கின்றாளோ அந்தப் பகுதியில் தோழியும் அமர்கின்றாள். படகை விட்டு விட்டுத் தலைவி புனலில் குதித்து நீந்தினால், தோழியும் அவ்வாறே செய்கின்றாள்.

தலைப்புணைக் கொளினே தலைப்புணக் கொள்ளும்
கடைப்புணைக் கொளினே கடைப்புணக் கொள்ளும்
புணைகை விட்டுப் புனலோ டொழுகின்

ஆண்டும் வருகுவள் போலும்.[3]

  1. புறநானூறு: 183
  2. தொல்காப்பியம்: களவியல்: 35.
  3. குறுந்தொகை: 42. 1-4.