பக்கம்:சங்க கால மகளிர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

ளாய் மலையுறையும் இறைவனை நன்னீருடன் நறுமலர்களைக் கையிற்கொண்டு அருச்சித்து வழிபட்டனள்” என்று கபிலர் பாடுகின்றார்.

குன்றக் குறவன் காதன் மடமகள்
மன்ற வேங்கை மலர்சில
மலையுறை கடவுள் குலமுதல் வழுத்தித்
தேமபலிச் செய்த வீர்நறுங் கையள்
மலர்ந்த காந்தள் நாறிக்

கவிழ்ந்த கண்ணளெம் மணங்கி யோளே.[1]

காளையை யடக்கிய காளையரை விரும்பிய கன்னியர்:

முல்லைநில மகளிர் தங்களால் விரும்பி வளர்க்கப்பட்ட வலிய எருதுகளை அஞ்சாது பிடித்து அடக்கிய வீரக் காளையரையே மணக்க விரும்பினர். ஏறுபொருது, தம் அஞ்சா நெஞ்சத்தினையும் ஆண்மைத் திறலையும் காட்டாத காளையரை மறுபிறவியிலும் மணக்க அவர்கள் விரும்பவில்லை.

கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்

புல்லாளே ஆய மகள்.[2]

ஏறு தழுவுவோர்க்கே கூந்தலம் மகளிர் உரியர் எனப் பேசுகின்றனர்.

கொல்லேறு சாட இருந்தார்க்கு எம் பல்லிரும்

கூந்தல் அணைகொடுப்பேம் யாம்.[3]

இவற்றால் முல்லைநில மகளிர் கை பற்றக் (to win the hand) கொல்லேற்றினை அடக்கும் வீரம் வேண்டப்பட்டது என்பது பெறப்படுகின்றது. இக்காலத்துப் போலன்றிச் சங்க


  1. ஐங்குறுநூறு :259
  2. கலித்தொகை: 103:63-64
  3. முல்லைக்கலி: 1:41-42.