பக்கம்:சங்க கால மகளிர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்
அருநெறி ஆயர் மகளிர்க்கு

இருமணம் கூடுதல் இல்லியல் பன்றே.[1]

ஆயர் மகன் ஒருவன் கையாற் புனைந்த கண்ணியை ஆய்ச்சி ஒருத்தி தன் கூந்தலில் முடித்தாள். கண்ணியைக் கூந்தலிற் பார்த்துவிட்டுத் தாய் வினவினால் என்ன காரணத்தைச் சொல்லுவது எனக் கலங்கினாள். தோழி அவள் கலக்கத்தைத் தேற்றிக் கூறுகிறாள்.

“தலைவி! அவனோர் ஆயர் மகன்; நீயோர் ஆயர் மகள். அவன் உன்னை விரும்புகிறான். நீயும் அவனை விரும்புகிறாய். உன் அன்னை உன்னை நொந்து கொள்வதற்கு இதில் எதுவுமே இல்லை. ஏனெனில் உன் காதல் நெஞ்சத்தைப் போன்றதுதான் அன்னையின் நெஞ்சமும்” என்று குறிப்பிடுகின்றாள்.

ஆயர் மகனாயின் ஆயமகள் நீயாயின்
நின் வெய்யனாயின், அவன் வெய்யை நீயாயின்
அன்னை நோதக்கதோ இல்லைமன்; நின்நெஞ்சம்

அன்னை நெஞ்சாகப் பெறின்.[2]

இதனால் பெறப்படுவது, வழிவழியாக ஆயமகளிர் களவு மணம் கொண்டனர் என்பதே. குறுந்தொகைப் புலவரொருவர் கூற்றும் சங்க காலத்தில் களவுமணம் பெருவழக்காக இருந்தது என்பதனைப் புலப்படுத்துகின்றது. [3]

தொல்காப்பியனார் குறிப்பிடும் மனையுறை மகளிர் பண்புகள்:

கற்பும், காமமும், நல்ல ஒழுக்கமும், பெண்மைத் தன்மை பொருந்திய பொறுமைப் பண்பும், நிறைவுடைமை


  1. முல்லைக்கலி: 14:15-21.
  2. முல்லைக்கலி: 7:20-23 .
  3. “அக லிரு விசும்பின் மீனினும்
    பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே”- குறுந் தொகை: 44 : 3-4