பக்கம்:சங்க கால மகளிர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்.[1]

நல்ல குடிப்பிறப்பொழுக்கம்:

நற்பாலொழுக்கம் எனப்படுவது எவ்வாற்றானும் தங்குலத்திற்கு ஏற்றவாற்றான் ஒழுகும் ஒழுக்கமாகும்.

ஒரு சமயம் பரத்தையின் பிரிந்துவந்த தலைமகனுக்குத் தூதாகப் பாணன் ஒருவன் தலைவியை வாயில் வேண்டி நின்றபோது (seeking the permission to enter) தலைவி, “அவரிடத்து நமக்குச் சினம் இல்லை; அவர் நம்மால் உபசரித்து வழிபடுவதற்கு உரியவரே அல்லாமல் அளவளாவி மகிழ்தற்குரியரல்லர்” என்று தன் குடிபிறந்த ஒழுக்க நலந் தோன்ற உரைத்தாள்.

நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினு முரையல் அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ

புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே.[2]

பிறிதொரு தலைவி, பரத்தையர்பாற் (harlot) சென்ற தலைவன் விட்ட தூதுவர், தலைவன் வீடு திரும்புவதற்கு அவளுடைய உடன்பாட்டை வேண்டியபொழுது, அதனை மறாது வழங்கினாள். தலைவி தலைவனுக்கு வாயில் நேர்ந்தாள் (accepted for the admittance of the hero) என்பதனைக் கேள்வியுற்ற தோழி, “தலைவன் கொடுமை தன்னைத் துன்புறுத்தவும் அதனைப் பாராட்டாமல் உடம் படுதற்குரிய இக்குடியிற் பிறத்தல் கொடிது” என்று கூறித் தலைவியின் உயர்ந்த குடிப்பிறப்பொழுக்கத்தினைப் பாராட்டினாள்;


  1. குறுந்தொகை: 1.35: 1-2.
  2. குறுந்தொகை: 79.