பக்கம்:சங்க கால மகளிர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


மேலும், 'வந்தார் அனைவருக்கும் நல்வரவேற்பு நல்கும் வளமனை'[1] என்றும் 'உலகமே புகுந்தாலும் பல ரோடு சேர்ந்து விருந்துண்ணத் தக்க வாயில்'[2] என்றும் விருந்தோம்பும் செல்வமனைகள் பேசப்படுகின்றன. விருந்து' கணவன் மனைவியரிடையே ஊடல் (sulkiness) தீர்க்கும் வாயிலில் (channel) ஒன்றாகவும் கருதப்பட்டது.[3]

சுற்றம் ஓம்புதல்

'சுற்றம் ஒம்புதல்’ என்ற தொடருக்கு உறவினர்களை உண்டி முதலியன தந்து பாதுகாத்தல் என்பது பொருளாகும்.

நச்சினார்க்கினியர் இத்தொடருக்குப் பல செய்திகளை உள்ளிட்ட அரியதோர் விளக்கத்தினைத் தம் பொருளதிகார உரையில் வழங்கியுள்ளார். அவ்வுரை வருமாறு;

"கொண்டோன், புரக்கும் நண்புடை மாந்தரும், சுற்றத்தாரும் குஞ்சரம் முதலிய காலேசங்களும் (கால் நடைகள்- cattle) பல படைமாக்களும் உள்ளிட்ட சுற்றங்களைப் பாதுகாத்து அவை உண்டபின் உண்டல்" என்று உரையெழுதியுள்ளார்.[4]

முதலாவது தன் கணவன் உவக்க அட்டிற்றொழிலில் (சமையல் தொழில்) மனைவி மேம்பட்டிருக்க வேண்டும்.


  1. 102. "வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப மலரத் திறந்த வாயில் பலருண" குறிஞ்சிப்பாட்டு: 202-3.
  2. 103. "உலகுபுகத் திறந்த வாயிற்பலரோ டுண்டன் மரீஇ யோனே" -புறநானூறு: 234:5-6.
  3. 104. நம்பியகப் பொருள்: அகத்திணையியல்
  4. 105. தொல். கற்பியல்: 11 நூற்பாவுரை.