பக்கம்:சங்க கால மகளிர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

என்பதில் ஐயப்பாடில்லை.

'இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மானக் கடை' என்று தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெருமானும் செப்பி யுள்ளமை நோக்குக.

சங்க காலம் தமிழ் இலக்கிய வரலாற்றின் பொற்கால மெனலாம். அப்பொற்காலத்தே மிளிர்ந்த பொற்றொடியர் பல்லாற்றானும் மாண்பு நிறைந்த மகளிராகத் திகழ்ந்தனர். சங்க கால மகளிர் பண்பாடு போற்றத்தக்கதாயிருந்தது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நாற்குணங்களும் நிறைந்தவர்களாக அவர்கள் துலங்கினர். பெற்றோர் ஆதரவில் வளர்ந்த காலையிலும், பின்னர்ப் புகுந்த வீட்டில் மனை வாழ்வு அமைத்துக் கொண்ட காலையிலும், ஏன் எப் போதுமே அவர்கள் வாழ்வு போற்றத் தக்கதாகவே பொலிந்தது. திருமணத்திற்குப்பின் "இருதலைப் புள்ளின் ஒருயி ரம்மே” என்ற அகநானூற்றுத் தொடரின்படி கணவனும் மனைவியும் காதல் நிறைந்து கருத்தொருமித்து இல்லறம் நடத்தினர். பெண்ணிற் பெருந்தக்கதான கற்பைப் போற்றி வாழ்ந்தனர். ஒரு வீட்டின் மகிழ்ச்சி அவ்வீட்டிற்கு வாய்த்த மனைவியைப் பொறுத்தே அமைந்தது. இதனாலன்றோ ஏர் பிடித்தவன் என்ன செய்வான் பானை பிடித்தவள் பாக்கியம்' என்ற பழமொழியும் எழுந்தது.

தன் நலம் புதிது உண்டு சென்ற தலைவன் திருமண முயற்சியினை மேற் கொண்டு, தன்னை வரைந்து கொள்ள வில்லை என்ற நிலையில் வாடிய மனத்தளாய் வாழும் மங்கையும் 'கொடுத்துவை தாவெனச் சொல்லினும் இன்னாதோ நம் இன்னுயிர் இழப்பே' என்று குறிப்பிடுவதிலிருந்து, தம் உயிரினும் அருமையுடையதாக அவர்கள் போற்றிய பண்பின் திறப்பாடு தெரிய வருகின்றது. எத்துணைத் துன்பம் வந்திடினும் மடல் ஏறாத மாண்பு போற்றப்படுகின்றது.

இவ்வாறு பல்லாற்றானும் பெருமை சான்ற சங்க கால மகளிர்தம் ஒழுகலாறுகளையும் பண்பாடுகளையும் பரக்கப் பேச வேண்டும் என்ற அவாவில் எழுந்ததே இந்நூல்.

வழிபடு தெய்வம் முருகனைப்பற்றி நூலெழுதிய யான், சங்க காலப் பெண்மையையும் எழுத்தில் வடித்துக் காட்ட வேண்டும் என்ற பெருநோக்கில் இந்நூலினையும் யாத்துள்ளேன். என் மனத்திற்கு நிறைவினை நல்கும் இச்சிறு நூலினைப் பெண்மையைப் பேணிப் பாராட்டும் தமிழ்கூறு நல்லுலகிற்குமுன் வைக்கின்றேன்.

■ சி. பா.