பக்கம்:சங்க கால மகளிர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

இல்லை. தமிழில் தலைசிறந்து விளங்கும் அகப்பொருள் நூல்களின் உள்ளக்கிடக்கை என்னை? இன்பமன்றோ? உரிமை இல்லா இடத்தில் இன்ப நிகழ்ச்சி ஏது? உரிமையின் ஒழுக்க மன்றே இன்பம்? இன்ப நுகர்ச்சிக்கு இருபாலாரிடத்தும் ஒத்த உரிமை இயல்புகள் இருத்தல் வேண்டும். ஒத்த உரிமை இயல்புகளே பெரிதும் பழந்தமிழ்நாட்டு ஆண் பெண் வாழ்வாக அமைந்திருந்தன. அவைகளை ‘ஒத்த நலனும் ஒத்த குணனும் ஒத்த கல்வியுமுடைய ஒருவனும் ஒருத்தியும்’ என்றும் தலைவன் தலைவியர் அன்பு நிலையை, ‘ஒராவிற்கு இருகோடு பூத்தா லென்ன’ என்றும் நக்கீரனார் நவின்றிருத் தலை நோக்குக. பழந்தமிழ் நாட்டு மணம் களவாயிருந்ததும் சண்டுக் கருதற்பாற்று. பெண்மகள் தனக்கினிய தலைவனைத் தானே தெரிந்தெடுத்துவந்த வழக்க மொன்றே அந்நாளைய பெண்ணுரிமைக்குப் போதிய சான்றாக நிற்கிறது”.[1]

மதிப்பிற்குரிய என் பேராசிரியப் பெருந்தகையும், மதுரைப்பல்கலைக்கழகத் துணை வேந்தரும் ஆகிய டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் ‘பெண்மை வாழ்க’ என்னும் தம் நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார்.

“சங்க காலம் என்று கூறப்படும் காலத்தில் – அதாவது கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட – காலத்தில் அரசியல், சமுதாய இயல், வாணிகம் முதலான பல துறைகளிலும் தமிழ்நாடு முற்போக்கு அடைந்திருந்தது. அந்தக் காலத்து இலக்கியங்களை ஆராய்ந்தால், அப்போது பெண் மக்கள் நன்கு மதிக்கப்பட்டிருந்த உண்மையையும் காணலாம். அப்போது தோன்றிய புலவர்களில் முப்பதின்மருக்கு மேல் பெண் புலவர்கள் இருந்திருக்கின்றனர். வேற்றரசரிடம் தூது செல்வக் கூடிய அளவிற்குத் தொண்டு செய்த அவ்வை


  1. திரு. வி. கலியாணசுந்தரனார்; பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை: 39-40