பக்கம்:சங்க கால மகளிர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

ஏற்றுக்கொள்ளத் தக்கதே என்பதாகும். சிலர் இத் தொடரினை வைத்துக் கொண்டு மகளிரினும் ஆடவர் சிறந்தவர் என்று கொள்ளுவர். “மிகுதலாவது குலம் கல்வி பிராயம் முதலியவற்றான் மிகுதல்” என்று உரை காண்பர் நச்சினார்க்கினியர்.

முதலாவது தன்னினும் வயது முதிர்ந்த பெண்ணை ஆடவன் ஒருவன் மணக்கும் முறை தமிழகத்தில் இல்லை. பெண் விரைவில் முதுமையுடையவளாகின்றாள். பிற்காலத்தில் பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாகப் பெண் ஏழு பருவங்களுக்குரியவளாகப் பிரிக்கப்பட்டாள். இறுதிப் பருவமான பேரிளம் பெண் பருவமே நாற்பது வயது எனக் கொள்ளப்பட்டது. எனவே இளமை நோக்கித் தொடக்கக் காலத்தில் பெண் ஒருத்தியைக் காதலிக்கும் ஆண் ஒருவன் அவள் இளமை மாறிய முதுமைக் காலத்தில் அவள் பண்பை நினைத்து போற்றி வாழ வேண்டும் என்பர். அண்ணாந்து உயர்ந்த வனப்பினைக் கொண்ட கொங்கைகள் தளர்ச்சியுற்றுப் போனாலும், பொன்னை நிகர்த்த மேனியிடத்துக் கருமணி போலத் தாழ்ந்திருக்கும் நல்ல நீண்ட கூந்தலானது நரையோடு முடிக்கப்பெறும் தன்மையை அடைந்தாலும் மீ இவளைக் கைவிடுதலாகாது” என்று உடன் போக்கு (elopement) மேற்கொள்ளும் தலைவனிடம் தோழி கூறி நின்றாள்;

அண்ணாங் தேங்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனி மணியின் தாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் கரையொடு முடிப்பினும்

நீத்தல் ஓம்புமதி பூக்கேழ் ஊர.[1]

இத்தமிழ் மரபினையே பின்பற்றி இக்காலக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் அன்பின், பண்பின்


  1. நற்றிணை: 10: 1-4.