பக்கம்:சங்க கால மகளிர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

அறிவித்தலும், உள்ளக் கருத்து அறிதல் அருமையும் பெண்ணின் பெரும் பண்புகள் என்றும்[1] குறிப்பிட்டுள்ளார்.

இவற்றால் எல்லாம் நாம் அறிவது ஆணின் உடல் வன்மைக்கும் வெளியுலகத் தொடர்பிற்கும் ஏற்ப ஆணின் இயல்புகள் விளங்கின என்பதும், பெண்ணின் உடல் மென்மைக்கும், குடும்பத்தினை நடத்தும் பாங்கிற்கும் ஏற்பப் பெண்ணின் இயல்புகள் இயல்பிலேயே அமைந்திருந்தன என்பதுமாகும்.

தமிழர் காதல் ஒழுக்கத்தை ‘அகம்’ என்ற சொல்லால் வழங்கினர். அகம் என்ற சொல்லிற்கு உள்ளம், வீடு போன்ற பொருள்கள் உண்டு. “அகத்துறை இலக்கியங் களில் எல்லாம் உலகிலேயே ஒப்பற்று விளங்குவது தமிழில் உள்ள அகத்துறை இலக்கியமே” என்று டாக்டர் தனிநாயகம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் [2] மேலும் அவர்,

“பெண்ணின் இயல்பை ஷேக்ஸ்பியரைத் தவிர எவரேனும் அறிவரெனக் கூறுவாரெனின், அவர் அறிவிலர்: அன்றேல் பேரறிஞர் என்ப. பெண் உள்ளத்தை நன்கறிந்து பாடிய செய்யுட்களால், நம் சங்கப் புலவர் பேரறிஞர் எனபது துணியப்படும்” என்கிறார்.[3]


  1. “செறிவும் நிறைவுஞ் செம்மையுஞ் செப்பும்
    அறிவும் அருமையும் பெண்பா லான” -தொல்: பொருளியல்: 15
  2. அறிஞர் தனிநாயக அடிகளார்: தமிழ்த்தூது:ப. 44.
  3. அறிஞர் தனிநாயக அடிகளார்: தமிழ்த்தூது: ப. 46.