பக்கம்:சங்க கால மகளிர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73


களவுத் துறையை விளக்கி நிற்கும் பல பாடல்கள் சமுதாயத்தில் மகளிர் பெற்றிருந்த சுதந்திரத்தினைப் பறை சாற்றுவனவாகும். “தலைவன் ஒருவனைக் காதலித்து வரும் பெண்ணொருத்திக்கு அவள் பெற்றோர் புதியதோர் இளைஞனுக்குத் திருமணம் செய்விக்க ஏற்பாடுகள் மேற் கொள்ளும்பொழுது தோழி அறத்தொடு நின்று (relevation to virtue) தலைவி கொண்டுள்ள காதலைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ பெற்ற தாயிடத்தில் சொல்லுவாள். அவள் தன் கணவனிடத்திலும், மக்களிடத்திலும் அறிவிப்பாள். முதலில் அவர்கள் இக்காதல் திருமணத்திற்கு உடன்படாது ஒரு பகல் முழுவதும் உருத்தெழுந்து மாறுபட்டிருந்தாலும் இறுதியில் அவர்கள் (காதலர்கள்) இருவர்மாட்டும் ஒரு குற்றமும் இல்லை எனத் தெளிந்து தாங்கள் செய்தியைக் கேட்ட அளவிற் கொண்ட கோபத் திற்கு நாணப்பட்டுத் தலையைக் கீழே சாய்க்கின்றனர்” . இவ்வாறு குறிஞ்சிக் கலிப்பாட்டொன்று தெரிவிக்கின்றது. [1]


மேலும் இங்குத் தோழி நற்றாய்க்குச் சொன்ன விளக்கங்கள் நன்கு மனங்கொளத் தக்கவை.

“அருவியில் நீந்திக் களைத்து வெள்ளம் அடித்துச் சென்ற தலைவியைக் காப்பாற்றினான் தலைவன் ஒருவன். வெள்ளத்தில் குதித்துத் தன்னுயிரைப் பொருட்படுத்தாது அவளைத் தழுவி யெடுத்து வந்தபொழுது ‘அவன் அகன்ற


  1. “அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட
    என்னையர்க் குய்த்து ரைத்தாள் யாய்;
    அவரும் தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து
    ஒருபக லெல்லாம் உருத்தெழுந்து ஆறி
    இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று
    தெருமந்து சாய்த்தார் தலை.”

    -குறிஞ்சிக்கலி: 3: 20-25.