பக்கம்:சங்க கால மகளிர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


(4) "எம் வீட்டினுள்ளே நுழைபவனே! நீ யார்! அறிந்தேன். புதுமலர் தேரும் வண்டே போல நாள்தோறும் கலியாண கோலத்திலேயேதான் நீ விளங்குகிறாய்' [1]

இவண் (இங்கு) கூறிய - தலைவி எழுப்பிய கேள்விக் கணைகளில் பெண்ணின் உரிமை மனம் நன்கு கமழ்வதைக் காணலாம். வீட்டைப் பொறுத்த வரையில் அது தலைவியினுடையதே யாகும். 'என்வீடு' என்று தலைவன் குறிப்பிடுவது இல்லை. தலைவி செம்மாப்புடன் 'எம்மனை' 'எம்இல்' என்று குறிப்பிட்டுக் கொள்கின்றாள். இத்தகைய உயர் நிலைக்குக் காரணம் மகளிருடைய நிறையும் துணிவும் கற்பு மேம்பாடுமேயாகும்.

இதனால் தான் இத்தகைய பண்பின் வழிவந்த குடியில் பிறத்தல் அரிது என்று கூறப்பட்டது.[2] எனவே, தலைவி

"ஆன்ற கற்பின் சான்ற பெரியள்"[3] என்றும், 'வடமீன்போல் தொழுதேத்தும் வயங்கிய கற்பினாள்', என்றும்[4] போற்றப் பெற்றாள்.

ஆணிற்கும் கற்பு மேம்பாடு:

"கற்புநிலை என்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கு மஃது பொதுவில் வைப்போம்"
[5]

என்று பாரதியார் ஆணிற்கும் கற்பை வற்புறுத்தியுள்ளார்.


  1. மருதக்கலி ; 33;1-3

    'யாரை நீ எம்இல் புகுதருவாய்? ஓரும்
    புதுவ மலர்தேரும் வண்டேபோல் - யாழ
    வதுவை விழவணி வைகலும் காட்டினையாய்"

  2. குறுந்தொகை; 45;5
  3. அகநானூறு; 190;12.
  4. பாலைக்கலி; 1; 21
  5. பாரதியார் கவிதைகள்: பெண்கள் - விடுதலைக்கும்மி