பக்கம்:சங்க கால மகளிர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91


தன் தேவியாம் பெருங்கோப்பெண்டு என்பாளைத் தன் அருகிலேயே வைத்துக் கொண்டு இவ்வாறு ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் வஞ்சினம் மொழிகின்றான். அவள் மாட்டு இவன் பேரன்பு கொண்டவனாக இருந்ததனால்தான், இவன் இறந்தவுடனே அவளும் கைம்மை நோன்புகொண்டு இவ்வுலகில் வாழ ஒருப்படாமல், அவனுடைய ஈமத் தீயில் பாய்ந்து உயிர்விட்டாள்.[1] இச்செய்தியினை முன்பே நாம் கண்டோம்.

ஒருவர்மாட்டு ஒருவர் பெருங்காதல் கொண்ட நிலையினை இந்நிகழ்ச்சிகள் தெரிவிக்கும்.


அஃறிணையுயிர்களுங் காட்டிய ஆருயிர் அன்பு

மேலும் குறுந்தொகைப் பாடலொன்றில், அஃறிணை (irrational being) உயிர்களில் ஒன்றாகிய குரங்குமாட்டும் இருந்த காதலின் வன்மை வெளிப்படுகின்றது.

இாவுக் குறி (night tryst) வந்து செல்லும் தலைமகனை இரவு வந்து தலைவியைச் சந்திக்க வேண்டாமென்று கூறித் தடுத்து, விரைவில் தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தோழி வற்புறுத்துகின்றாள். அதுபொழுது பின்வருமாறு கூறுகின்றாள்:

“கரிய கண்ணையும் தாவுதலையும் உடைய ஆண் குரங்கு இறந்துபட, அதனால் ஏற்பட்ட கைம்மைத் துன்பத்தினைப் பொறுத்துக் கொள்ள மாட்டாத அழகிய பெண் குரங்கானது, மரமேறுதல் முதலிய தம் தொழிலைக் கல்லாத வலிய குட்டியைத் தன் சுற்றத்தினரிடம் கையடையாக (அடைக்கலம்) ஒப்படைத்துவிட்டு உயர்ந்த மலையில் ஏறிக் கீழ்ப்பாய்ந்து தன் உயிரினை மாய்த்துக் கொள்ளும்: அத்தகைய மலைச்சாரலையுடைய நாட்டுக்குத் தலைவனே:


  1. புறநானூறு; 246