பக்கம்:சங்க கால மகளிர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

இந்தச் சுவையான பகுதியால் தவறுக்கு ஆளாகின்றவன் ஆண்மகனே என்பதும், பெண் மகள் ஆளாவதில்லை என்பதும், எனவே புலவிக் காலத்து அவன் மனைவியிடம் பணிந்துபோவான் என்பதும் பெறப்படும். சில சமயங்களில் மனைவியின் காலில் தலைவன் விழுந்து விடுவதாகவும், அப்போது அத்தலைவி ‘இது நன்றன்று. என் தங்கையர் (பரத்தையர்) இக்காட்சியைக் கண்டால் நல்லதில்லை’ என்பாள் என்றெல்லாம் பிற்கால இலக்கியங்கள் பேசும். [1]

காதற்பரத்தை கூற்றாக வரும் குறுந்தொகைப் பாடலொன்றில், தலைவன் தன்னிடத்தில் வயப்பட்டான் போல இருந்துவிட்டு, தற்போது தலைவிபாற் சென்று அவளுக்கு அடங்கி, கையையும் காலையும் தூக்கும் கண்ணாடிப்பாவை போன்று நடந்து கொள்கின்றான் என்று குறிப்பிடுகின்றாள். [2]


இதனாலும் தலைவி மாட்டுத் தலைவன் கட்டுப்பட்டு நடக்கும் திறம் அறியப்படும்.

அஞ்சவந்த உரிமை

தலைவன் தானும் பிறரும் அஞ்சும்படியாகத் தலைவி மாட்டு உளதாகிய கற்பாகிய உரிமை என்று தொல்காப்பி யனார் குறிப்பிடுவார்.[3]

இல்லறம் நடத்தும் பண்பு, பிறர்க்குக் கொடுக்குந்திறம், கற்பு மேம்பாடு விளங்குந் திறம் என்று மூன்று வகை நிலைகளைக் குறிப்பர் நச்சினார்க்கினியர்.


  1. தஞ்சைவாணன் கோவை; 398
  2. குறுந்தொகை 8
  3. தொல்; கற்பியல்; 5 4
    ‘அஞ்ச வந்த உரிமைக் கண்ணும்’