பக்கம்:சங்க கால மகளிர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


போர்க்களத்திற்குத் தம் மனைவியரை அழைத்துச் செல்லும் வழக்கம் தலைவர்க்கு இருந்ததில்லை என்கிறார் தொல்காப்பியனார்.

எண்ணரும் பாசறை பெண்ணொடும் புணரார்[1]

கொடிதாகிய வாடை வருத்தவும் தன் வினையில் மேம்பட்டிருந்தான் பாண்டியன் என்பது நெடுநல்வாடை உணர்த்தும் செய்தியாகும்.

மேலும் போர் தொடங்குவதற்கு முன் பகைவர் நாட்டில் ஓர் அறிவிப்புச் செய்யப்படுமாம். அதாவது பசுக்கூட்டம், பசுவியல்புடைய அந்தணர் பெண்டிர், நோயாளர், மக்கட்பேறு பெறாதோர் முதலியோர் போர் தொடங்கு முன் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட வேண்டுமென்று அறிவிப்புச் செய்வது அறத்தொடு கூடிய குறிக்கோளாகும்.

இவ்வாறு நெட்டிமையார் என்னும் பெண்பாற் புலவர் கூறுவர்.[2]

அங்கியங் கடவுள் (God of fire) மதுரையை எரியுண்ணக் கண்ணகியால் ஏவப்பட்டவுடன், யார் யாரைத் தான் பற்றுவது, யாரை விடுவது என்று கேட்ட பொழுது, கண்ணகி பார்ப்பார், அறவோர், பத்தினிப்பெண்டிர், மூத்தோர், குழவி என்னும் இவர்களை விடுத்துத் தீமை புரிவோர் பக்கமே தீ சேர்வதாக என்று கூறியமை ஈண்டு ஒப்பு நோக்கியுணரற்பாலது. [3]


  1. தொல்:கற்பியல்:131
  2. புறநானூறு; 9;1-6
  3. சிலம்பு; வஞ்சினமாலை; 53-56.