பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

களின் படைகளை எதிர்த்துத் தாக்கும் படைவலி படைத்தவர்கள் என்பதில் ஐயம் சிறிதும் இல்லை. இத்தகைய பெருவலிபடைத்த நீங்கள், எம் குறுநில மன்னனான பாரியை எதிர்த்துள்ளீர்; பறம்பையும் சூழ்ந்துள்ளீர்; அப்பறம்பு நாடு முந்நூறு ஊர்களையுடையது. அதனை நீங்கள் கைப்பற்றுதல் என்பது முயற்கொம்பே யாகும். நீங்கள் எத்துணை நாட்களாக முற்றுகையிட்டுக் கிடந்தாலும் நாங்கள் வருந்தமாட்டோம். உணவு இன்றென உயங்க மாட்டோம். எங்கள் பறம்பு நாடு இயற்கை வளன் இயையப்பெற்றது. இயற்கையில் கிடைக்கும் உணவினைப் பெறவேண்டும் என்னும் நிலையினில் நாங்கள் இருப்பவரல்லேம். “விச்சதின் றியே விளைவு செய்கு வாய்,” என்பதற்கு இணங்கவும், “வித்தும் இடல் வேண்டுங் கொல்லோ,” என்பதற்கு ஏற்பவும், யாங்கள் விளைத்தல் இன்றிப் பெறக்கூடிய உணவு எங்கள் பறம்பு மலையில் உண்டு. அவை இன்னவென நீங்கள் அறிய விரும்பின் அறைகின்றனன். அவற்றையும் கேளுங்கள்: சிறிய இலையினையுடைய மூங்கில் நெல் எங்கட்கு முட்டின்றி விளையும். அவற்றைக் கொண்டு உணவு சமைத்து உண்டு வருவோம். எங்கள் பறம்பு மலைப்பாங்கர், எங்கும் தீஞ்சுனைப் பலா முழவென முதிர்ந்து காணப்படும். அவற்றை உண்டு ஆனந்தம் உறுவோம். வள்ளிக்கிழங்கு எங்கட்கு வளமுறக் கிடைக்கும். அவற்றை அருந்தி ஆர்வம் அடைவோம். எங்கள் நாடு குறிஞ்சி நாடு. ஆதலின், தேன் இறால்கட்குத் தியக்கம் கிடையாது. குன்றுதோறும் தேன் அடைகள் தூங்கிக்கொண்டிருக்கும். ஆக, இந்நான்கு உணவுப் பொருள்