பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

றால், பாரி ஈகைக்கு எத்தனை எளியவனாய் இருந்தனன் என்பது வெளிப்படுகின்றதன்றோ !


பாரியின் இறப்பும் பாரி மகளிரும்

அந்தோ ! இவன் இத்துணைக் கொடைவள்ளலாய் இருந்தமையாலும், புறமுதுகு காட்டி ஓடா வீரனாய்த் திகழ்ந்த காரணத்தாலும், இவன் இருப்பதால் நம் இசைக்கு வசை ஏற்படும் என்று எண்ணியதாலும் மூவேந்தரும் வஞ்சனையால் பாரியை மாய்த்துவிட்டனர். அந்தக்காலத்துக் கபிலரும் பாரி மகளிரும் மற்றும் உள்ளோரும் வருந்திய வருத்தத்திற்கு அளவே இல்லை. பாரிமகளிர் நல்ல தமிழ்ப் புலமை வாய்ந்தவர்கள். பாடல் இயற்றும் பான்மையும் பெற்றவர்கள். அவர்கள் பிற்கால இரட்டைப் புலவர்களைப்போன்று முற்கால இரட்டைப் புலவர்களாக இருந்து, இருவரும் ஒன்று சேர்ந்து பாடும் பீடும் பெற்றவர்கள். அவர்கள் பாடிய பாடல்கள் பலவாக இருக்கலாம். ஆனால், நமக்கு இப்பொழுது கிடைத்த பாடல் ஒன்றேயாகும். அப்பாடல் கற்பார் நெஞ்சைக் கரையச் செய்யவல்லது, அது தம் தந்தையார் இன்மையால் வருந்திப் பாடப்பட்டது. தந்தையார் இறந்து ஒரு திங்கள் ஆயிற்று. மறு திங்களும் வந்துற்றது. அப்பொழுது அவர்கள் தம் தந்தையாரை எண்ணி, “சென்ற மாதம் முழுமதி நிலவில் யாமும் எம் தந்தையாரும் ஒருங்கிருந்து அளவளாவினோம். ஆனால், இந்தத் திங்களில் இம் முழு நிலவில் எங்கள் தந்தையாரை இழந்து வாடுகின்றோம். சென்ற மாதம் எங்கள் தந்தையார் பறம்புநாடு எங்கட்கே உரியதாய் இருந்தது; குன்றையும் எவரும் கொண்டிலர். இந்தத் திங்களில்