பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இதனால்தான் “காரிக் குதிரைக் காரியோடு மலைந்த ஓரிக் குதிரை ஓரியும் ” என்று இருவரும் இங்ஙனம் சிறப்பிக்கப்பட்டனர்.

ஓரியும் கழைதின் யானையாரும்

வல்வில் ஓரியின் ஈகையினைக் கழைதின் யானையார் கூறுகையில், ஈகையின் உயர்வையும், ஈகை புரியாமையால் எய்தும் தாழ்வையும் நன்கனம் சித்தரித்துப் பாடியுள்ளனர். இப்புலவர் இரத்தலை மிக மிக இழிவாகக் கருதியவர். அதனால், “ஈ என இரத்தல் இழிந்தது," என்றும் மொழிந்தார். வள்ளுவர்க்கும் இரத்தல் இழிவாகக் காணப்பட்டது. "ஆவிற்கு நீர் என்று இரப்பினும் இழிவு," என்கிறார் அவர். “இரந்து, உயிர்வாழவேண்டுமென ஒருவன் படைக்கப்பட்டானாயினும், அங்ஙனம் படைத்தவன் முதலில் அழிவானாக,” எனவும் வைது வசை பாடுகிறார். இரத்தலால் தனக்குரிய மானம் போய், தருமமும் துடைக்கப்பட்டுவிடும் எனக் கடிந்து பேசுகிறார் புகழேந்தியார். “ஏற்பது இகழ்ச்சி” என்பது நம் ஒளவை மூதாட்டியார் அறவுரை அல்லவா? “பல்லெல்லாம் தெரியக் காட்டிப் பருவரல் முகத்தில்கூட்டிச் சொல்வெல்லாம் சொல்லி நாட்டித் துணைக் கரம்விரித்து நீட்டி இல்லெலாம் இரத்தல், அந்தோ இழிவு இழிவு எந்த ஞான்றும்,” என்பது குசேலோபாக்கியானக் கவிஞர் கூற்று. இந்த நிலையில் ஒருவர் வந்து கேட்கையில் இல்லை என்று கூறுவது எத்துணை இழுக்கு என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்! இவற்றை எல்லாம் நன்கு அறிந்த கழைதின் யானையார், “ஈ என இரத்தல் எத்தனை இழிவோ அதனிலும் இழிகுணமானது