பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

உலோபக் குணம் உடையனாயின், அவனை எவரும் அணுகார், ஊற்றுநீர் சிறு அளவினையுடையதாயும் விலங்குகளால் சேறும் நீருமாகக் கலக்கப்பட்ட கலங்கல் நீராக இருப்பினும், அந்த நீரைப் பருகுதற்குப் பலரும் சென்று அவ்வூற்று நீரை அடைதற்குரிய வழிகளைச் செய்து வைப்பர். அதுபோல வல்வில் ஓரியைப் பலரும் நச்சிப் பரிசில் பெற்றுச் சென்றதனால், இவன் வாழ் இடமும் பல அதர்களையுடையது என்பதை எத்துணை நயம்பட ஓரியின் வரையா வள்ளன்மையைப் பாடியுள்ளார்! ஓரியை விரும்பி வந்தவர் பரிசில் பெறுதல் இன்றித் திரும்பார். பரிசிலர்கள் ஓரியைக் காணப் புறப்பட்ட காலத்தில் ஏதேனும் தீய நிமித்தங்கள் தோன்றியதனாலும், அன்றித் தாம் புறப்படும் வேளை நல்லோரையாக இல்லாமல் இருப்பதாலும் ஒருவேளை ஓரியைக் காணல் இது சமயம் அன்று என நின்று போயின், பரிசில் பெறாதது அவர்கள் குற்றமே ஆகும். அந்தத் தீய முகூர்த்தத்திலும், கொடிய சகுன வேளையிலும் புறப்பட்டு ஓரியைக் கண்டால், இவன் “இதுபோது இல்லை," என இயம்பும் இயல்புடையவன் அல்லன். “அஞ்சேல்” என்ற சொல்லும் அடையா நெடுங்கதவும் உடையான் வல்வில் ஓரி. ஆகவே, இவன் கருவானம்போல வரையாது சுரக்கும் வள்ளியோன் ஆவன்” எனப் பாடிப் புகழ்ந்தார் கழைதின் யானையார்.

ஓரியும் பரணரும்

ஓரியின் ஈகை உலகம் அறிந்த ஓர் உண்மையாக இருந்தமையால், பரணர் என்னும் புலவரும் இவன் ஈகைப் பண்பை நன்கு எடுத்து இயம்பியுள்