பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

ஈந்து ஈந்து மேலும் அவற்றைத் தன்னை அடைந்தவர்கட்கு ஈயும் கடப்பாடு அற்றவனாயினும், இவனுடைய இல்லம் பொலிவுற்றிருத்தலில் குறையாது. இவன் மனை மாண்பொருள் படைத்து நுகரும் இனிய தாளிப்பையுடைய உணவைத் தனித்துண்ணும் மன்னர்களின் மாளிகையினும் மாண்புடையது என்பதுதான் ஆயைப்பற்றிய வஞ்சப்புகழ்ச்சியாகும். இங்ஙனம் பாடியவர் ஏணிச் சேரி முட மோசியாராவார்.

பயன்கருதாப் பண்பு

ஈகையில் முனைபவருள் பெரும்பாலோர் ஒரு பயன் கருதிச் செய்தல் உண்டு. இம்மையில் ஈகையினை மேற்கொள்ளின், அம்மையில் அதன் பயன் பெரிது என்று கருதி இருந்தனர் பலர். இப்படிப் பயன் கருதுதல் வாணிப முறையாகும். அந்த வாணிப முறை பற்றியும், பயன்கருதியும் ஆய் ஈகை புரியும் இயல்பினன் அல்லன். இவன் மேற்கொண்ட ஈகை, “நல்லாறெனினும் கொளல் தீது, மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று” என்னும் கொள்கையும், சான்றோர் சென்ற நெறி வழியே தானும் சென்று நடத்தல் வேண்டும் என்னும் குறிக்கோளுமுடையதாகும். இதனைப் புலவர் எத்துணை அழகுறப் பாராட்டியுள்ளார் பாருங்கள்.

“இம்மைச் செய்தது மறுமைக் காம்எனும்
அறவிலை வணிகன் ஆய் அலன் ”

என்பது புலவர் பாட்டு. இவ்வாறு பயன் கருதாது செய்யப்படும் ஈகையே தலையாய ஈகை. இந்த ஈகையே பாராட்டற்குரிய ஈகையும் ஆகும். மானும்