பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

மரையினமும், நரந்தையும் நறிய புல்லும் மேய்ந்து, பின்னர்க் குவளைகள் மலர்ந்த சுனை நீரையும் பருகித் தகரமரத்தின் நிழலில் தங்கி இன்புறும். வடதிசையில் வயங்குவது இமயம். தென் திசைக் கண்ணே திகழ்வது ஆய்குடி. இவ்விருபாலும் மலையும், குடியும் மாணுற அமைந்திருத்தலினால் தான், இவ்வையம் தன் நிலையில் குலையாது நிற்கின்றது, இன்றேல் திசை தடுமாறிக் கீழது மேலதாகும்; மேலது கீழதாகும் ” என்று ஏணிச்சேரி முடமோசியார் கூறியதன் உட்பொருளை உற்று நோக்கின், உலகம் நிலைத்தற்கு அத்துணை ஆதரவானதாக ஆய் அண்டிரன் ஈகை இருந்துவந்தது என்பது புலனாகிறது. “இவன் ஈகையே ஈகை. இத்தகையவனை யான் முன்பே அடையாமல் எவர் எவரிடமேர் சென்று வீண்பொழுதைப் போக்கினேன். இவன் அன்றோ என்னால் முன்னர் நினைக்கப்படுபவன். இதனை யான் அறியாதது என் குற்றமே ஆகும். ஆகவே, என் உள்ளம் அமிழ்வதாக ! இவனை விடுத்துப் பிறரைக் கூறிய என் நா கருவியால் பிளக்கப்படுவதாக. இவன் புகழையன்றிப் பிறர் புகழைக்கேட்ட என் செவி பாழ்பட்ட கிணறுபோலக் கேட்கும் நிலையற்றுச் செவிட்டு நிலை உறுவதாக,” எனத் தம்மைத்தாமே வெறுத்துப் பேசிக்கொண்டனர் என்றால், ஆய் அண்டிரனது கொடைக்குணத்தை என்னென்று கூறுவது.

உறையூர் ஏணிச் சேரி முடமோசியார் தாம் அறியாமல் பிறரை முன்னர் எண்ணி இடர்ப்பட்டுப் போனமையால் பிறரும் அவ்வாறு செய்யாது, முன்பே ஆய் அண்டிரனை அண்மி, அரும்பொருள்