பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வாடினும் ஆய் அண்டிரனை அடைந்து அல்லலை அகற்ற வேண்டுமென எண்ணிலர்போலும்! அத்தகையவர் திடுமென ஆயினைக் காணப் புறப்பட்டனர். அவர் புறப்பட்டு வந்த நெறிகள் ஆறலை கள்வர் அமைந்த வழிகள். வெம்மைக்கோர் உறைவிடமான கொடும் பாலை வழிகள். அவர் வந்த காலத்தில் அவ்வாறலை கள்வர்கள் அவரிடமிருந்த சிறு பொருள்களையும் குரங்கு போலப் பறித்துக் கொண்டனர். அக்கள்வர்கள் அப்புலவருடைய நிலையினைக் குறித்துச் சிறிதும் இரக்கம் கொண்டிலர். இந்த நிலைகள் ஒரு புறமிருக்க அவர் உண்ணாது உயங்கிய வருத்தத்திற்கு அளவே இல்லை. அவரே அன்றி அவருடன் இருந்த சுற்றத்தினரும் உண்ணாமையால் உடல் மெலிந்து நடைதளர்ந்து, வருத்தமிகுதியால் கண்களில் நீர்கலங்கக் காணப்பட்டனர். இன்னமும் அவரைப்பற்றி இரக்கங் கொள்ள வேண்டிய நிலை யாதெனில், அவர் வறுமை காரணமாகத் தலைமயிர் எண்ணெய் தடவப்பெறாது ஈரும் பேனுமாய் நிரம்பி இருந்ததுவே. ஆகவே, அப்புலவர்க்கு, ஈரும் பேனும், ஆறலைகள் வரும், சுர நெறியும் பெரும் பகையாகக் காணப்பட்டன. ஆனால், அப்பகைகள் யாவும், ஆய் அண்டிரனை அணைவோம் என்னும் எண்ணத்தின் எதிரில் நிற்க இயலாமல், பரிதியைக் கண்ட பனிபோல நீங்கிப் போயின. ஆய் அண்டிரனை வந்து அணுகிப் புரவலனைப் புலவர் கண்டார். தம் பகை அன்றோடு பறந்துபோயது என உறுதிகொண்டார். தாயைக் கண்ட சேய்போல உவகை கொண்டார். தமக்குக் கேட்க உரிமை, உளதாதல்போல அண்டிரனுக்கும் கொடுக்க உரிமை யுண்டாதலால் அவனை நோக்கி