பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

“நுண்ணிய மணவினும் பல நாள் நீ வாழ்க பெரும! நின்னை எம் வாயால் வாழ்த்தி வந்தனம். நின் புகழை நச்சி வந்தனம். ஆகவே நீ இப்பொழுது உதவுதல் வேண்டும். நீ எனக்கும் என் சுற்றத்திற்கும் ஈவதால் நினக்கே ஈந்துகொண்டவனும் ஆகின்றாய். நீ தரும் வளம், நாங்கள் நெடுநாள் உண்டு உவத்தற்குரியதாகும். நாளும் நின்னை வாழ்த்தற்கும் உரியதாகும்” என்று கேட்டனர். இவ்வளவு வற்புறுத்தி ஆய் அண்டிரனைக் கேட்கவும் வேண்டுமோ? இவன் குறிப்பறிந்து அளிக்கும் கொடையாளி. “வறியார்க்கு ஒன்று ஈவதே கொடை; மற்றையவர்க்குக் கொடுக்கப்படும் கொடைகள் யாவும் ஒரு குறிக்கோளை எதிர்நோக்கிக் கொடுக்கப்படுவனவாகும்,” என்னும் சீரிய கருத்தைக் கொண்டவன். மேலும் துறையூர் ஓடை கிழார் தோற்றத்தைப் பார்த்த அளவில் ஈயும் மனம் இல்லாத எத்தகைய கொடியோனும், பொருளினை ஈந்து விடுப்பான் எனில், கொடுப்பதே தன் பிறவிப் பயன் எனக் கொண்டு வாழும் ஆய் அண்டிரன் கொடாதிருப்பானோ? துறையூர் ஓடைகிழார் உளம் கொளும் வகையில் செல்வந் தந்து சீரிய முறையில் அனுப்பி வைத்தான்.

ஆய் அண்டிரன் நடமாடும் கோயிலாகிய ஏழை எளியவர்கட்கு ஈந்துவந்து வந்ததுபோலப் படமாடும் கோயில் பரமனுக்கும் ஈந்து உள்ளம் உவகைகொள்வோனாய் விளங்கினான். நீல நாகம் தந்த ஆடையினை ஆலமர் செல்வனாம் முக்கண் மூர்த்திக்கு ஈந்து முகமலர்ச்சி கொண்டனன். இவனைச் சிறுபாணாற்றுப்படை ஆசிரியர்,