பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

போலவே, இவனும் பரிசிலர்க்குப் பரிகள் பலவற்றை ஈந்து பரவசம் உற்றவன். இவன் குதிரைகளை ஈந்து குதூகலிப்பவன் என்பதற்காகவே போலும் சிறுபாணாற்றுப்படை “காரிக்குதிரைக் காரி” என்றே இவனைப் போற்றுகிறது. இவுளிகள் பலவற்றை ஈவது போலவே இவுளியினை இவர்ந்து போதலிலும் சிறப்படைந்தவன் என்பதைப் பெருஞ் சித்திரனார் பேசுகையில் “காரியூர்ந்துபேர் அமர்க் கடந்த மாரியீகை மறப்போர் மலையன்” என்று இவனைப் புகழ்ந்து பாடியுள்ளார். காரியென்பது இவன் இவர்ந்து நடாத்தும் குதிரையின் பெயராகும்.

காரி ஈர நெஞ்சினன் என்பதை “மாரியீகை” என இவனது ஈகைக்குக் கைம்மாறு வேண்டாத மாரியை உவமை கூறியிருத்தலினின்றே உணர்கிறோம். ஈரத்திற்கு ஏற்ற வீரம் உடையவன் என்பது மறப்போர் மலையன் என்று அந்நூலே சிறப்பிப்பதிலிருந்து தெளியலாம். இவனைப் போலக் கொடை வள்ளலாகத் திகழ்ந்த வல்வில் ஓரியுடன் மலைந்தவன் என்பது, ஓரியைப் புகழ வந்த பெருஞ்சித்திரனார் “காரிக் குதிரைக் காரியோடு மலைந்த ஓரிக்குதிரை ஓரியும்" என்று குறிப்பிட்டிருப்பதனால் உணரலாம்.

ஈகைப் பண்பு

மலையமான் திருமுடிக்காரி இசையால் திசை போயவன் என்ற காரணத்தால் இவனை நேர்முகமாக நின்று புகழ்வதோடு இன்றி, இவனையும் இவன் ஊரையும் உவமையாகக் காட்டிப் புகழ்ந்துள்ளனர் புலவர்கள், அம்மூவனார் என்னும் புலவர் ஒரு பெண்ணணங்கின் கூந்தலைப் புகழ்கையில் அக்கூந்தற்