பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

அக்கூந்தற் பெண்ணையாற்றின் நுண் மணலை உவமை கூறினர். அப்படிக் கூறுகையில், இம்மலையமான் திருமுடிக்காரியைக் குறிப்பிட்டு, “துஞ்சா முழவின் கோவல் கோமான் நெடுந்தேர்க்காரி கொடுங்கா முன்றுறைப் பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கும் நெறியிருங்கதுப்பு” என்று சிறப்பித்துப் பாடினர். ஈண்டு கொடுங்கால் என்பது காரியின் ஆட்சிக்குட்பட்ட ஊரினைக் குறிப்பதாகும். இக்கருத்து அகநானூற்றில் காணப்படுவது. இவ்வாறே குறுந்தொகை யென்னும் நூலில் கபிலர் இவனது முள்ளூர்க்கானம் நறுமணம் நிறைந்த இடம் என்பதைப் பாடினர்.

கபிலர் காரியின் புகழைப் பலபடப் புறநானூற்றில் பாராட்டிப் பேசியுள்ளார். இவன் முள்ளூர் மலைக்கு உரியவனாய்த் திருக்கோவலூர் இருக்கை யுடையவனாய் இருந்தாலும், இவனை வந்து காணும் இரவலர்கள் பலர், நானாபக்கங்களினின்றும் வந்து பரிசில் பெற்று மீள்வர் என்றும் கபிலர் கருதுகிறார். அதனால், “ஒருதிசை ஒருவனை உள்ளி நால்திசைப் பலரும் வருவர் பரிசில் மாக்கள்,” எனப் பாடுகிறார். திருமுடிக்காரி இன்னாருக்கு இது கொடுத்தல் சாலும், என்று எண்ணி ஈபவன் அல்லன். எவர்க்கும் வரையாது எதையும் ஈபவன். இக்குணம் இவனிடம் கண்ட புலவர் கபிலர், அதனைச் சிறிது மாற்றவேண்டி, இவனை நோக்கி "மாவண் தோன்றலே, நீ வரையாது வழங்கும் வள்ளன்மையைக் குறித்து எனக்கு மகிழ்வே. என்றாலும், இரவலர்க்கும், என் போன்ற புலவர்களாகிய பரிசில்மாக்களுக்கும் சிறிது பாடு தோன்ற நீ பரிசில் ஈதல் உன் பண்பாடாகும்," என்று அறிவுறுத்துவார் போல