பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

பாடினன்” என்று குறிப்பிட்டுப் பாடியுள்ளார் இதனால் கபிலர் காரியின் புகழை அவ்வளவு பரக்கப் பாடியுள்ளார் என்பது தெரிகிறது. இப்படி இவர் பாடிவிட்டதால் இனிக் காரியிடம் வரும் புலவர்கட்கு இன்னது பாடுவது என்பது தெரியாமல் தடுமாறினர் என்பதும் நாம் அறியவேண்டி இருக்கிறது. இந்நிலையில் மாறோக்கத்து நப்பசலையார் தம்மை மிடிபிடித்து உந்த, சில சொற்களைக் கொண்டேனும் பாடிப் பரிசில் பெற்றுச் செல்லலாம் என்று வந்ததாகக் கூறிப் பரிசில் வினவுகிறார். அந்தோ ! புலவரின் வறுமை தான் என்னே ! அவர் சில சொல்லி என்? பல சொல்லி என்? காரி தன்னைப் புகழ்ந்த காலத்துத்தான் ஈய வல்லனோ? அல்லன், அல்லன். இவன் தன்னைக் கண்டவர்க்கெல்லாம் களிப்புடன் ஈயும் கடப்பாடுடையவன். மேலும், காரியின் ஈகையை இப்புலவர், “இவன் பகைவரை வென்று, அவர்களின் யானைகளைக் கைப்பற்றி முக படாத்தில் அமைந்த பொன்னைப் பாணர்களுக்கு ஈந்து மகிழ்பவன்,” என்று பாடுகிறார். ஆகவே, மலையமான் திருமுடிக்காரி ஈர நெஞ்சமும், வீர உள்ளமும் படைத்தவன் என்பதை நன்கு உணர்வோமாக.