உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அறிகிறோம். நள்ளி இலம் என்னும் சொல்லைப் பிறரிடம் சென்று மீண்டும் கேட்காதவாறு இவருக்கு ஈந்திருக்கின்றான் என்பதுந் தெரிகிறது. புலவர் இதனைக் குறிப்பிட்டுப் பாடுகையில் "உச்சிக்கண்ணிருந்து ஒலியுடன் ஒழுகும் அருவியையுடைய உயர்ந்த தோட்டி மலையையுடைய நள்ளி! உன் செல்வத்தை வாழ்த்தி வந்தனம். நின் செல்வம் எம்போலும் புலவர்களால் வாழ்த்தி வளர்தற்குரிய பெருமை வாய்ந்தது. ஏனெனில் அச்செல்வம் நின் தளர்ச்சியில்லாத வலிய முயற்சியால் ஆயது. அது தாள் ஆற்றித் தந்த பொருள். ஆகவே, அஃது என் போலியரால் நச்சப்படும் தன்மையுடையது. அச்செல்வத்தை நீயே துய்க்க எண்ணங்கொள்ளாமல், பரிசிலர்க்கும் ஈந்துவிடுகின்றாய். அந்தப் பண்புக்கு ஏற்ப எனக்கும் அளவுகடந்து அளித்து விட்டாய். இப்படி நீ அளித்தமையால் என்னுடைய நாக்கு, ஈத்து உவக்கும் இன்பமும் பெருமையும் படைக்காத அரசரை நச்சிப் புகழும் செயலை மறந்தது. நின்னையே பாடும் பண்பாடு பெற்றது” என்று பாடியுள்ளார். இதனால் பிற மன்னர்கள் தாமே துய்க்கும் குணம் படைத்தவர் என்பதையும், இவன் தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த பெருந்தகை என்பதையும் நன்கு உய்த்து உணர்ந்து கொள்க. மேலும் இக்கண்டீரக் கோப்பெரு நள்ளி வரையாது அளித்த வண்மை காரணமாக இவனிடம் பரிசில் பெற்ற பாணர்கள் மாலை வேளையில் வாசித்தற்குரிய செவ்வழிப் பண்ணை வாசிக்க மறந்தனர் என்பதும், காலைப் பொழுதின்கண் வாசித்தற்குரிய