பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிழிசலுக்கு உவமையாகும். இதனைச் செய்யுள் அடியில் குறிக்கையில் “பருந்தின் இருஞ் சிறகன்ன பாறிய சிதர்” என்றனர் புலவர்.

நள்ளி வேட்டைமேல் நாட்டமுற்றவனாய்க் காட்டகத்து வந்திருந்தனன். புலவரது நல்லோரையின் காரணமாக நள்ளி புலவரைக் கண்ணுற்றதும் கழிபெருந்துயர் கொண்டான்; புலவரது வறுமைக் கோலத்தையும்; பசியால் உயங்கிய வாட்டத்தையும் கண்ணால் கண்டான்; நெக்கு நெக்கு உருகினான். தன்னை உற்று நோக்குகிறான் எவனோ ஒரு வேட்டுவன். அவனுக்கும் ஒரு வணக்கம் செலுத்துவோம் என்பார் போலப் புலவர் தம் இரு கைகளையும் குவித்து மெல்ல அஞ்சலி பண்ணினார். விரைவாகவும் கைகளை முகிழ்த்து வணக்கம் செலுத்தப் புலவர்க்கு இயலவில்லை. அத்துணைப் பல ஈனராய்ப் புலவர் இருந்தனர். பசியால் உடல் மெலிந்திருந்தமையே அதற்குக் காரணம். இத்துணை கெட்ட நிலையினும் கையெடுத்து வணங்குகின்றனரே இவர், என இரக்கங்கொண்ட நள்ளி அவரை எழுந்திருக்க விடாது கையமர்த்தி இருக்கச் செய்தான். தான் வேட்டையில் வீழ்த்திய மான் ஒன்றன் மாமிசத்தைத் தீக்கோல் கொண்டு தீ மூட்டிப் பக்குவப்படுத்தி, “ஐய நீயும் நின்னுடன் வந்துள்ள நின் சுற்றமும் புசித்திடுக,” என்று ஈந்தனன். இதனைத் தன்னுடன் வந்த இளையரும் ஏனையோரும் தன்னை வந்து அணுகுதற்கு முன்பு செய்து முடித்தனன். அப்படி இவன் செய்ததன் நோக்கம் தான் ஓர் அரசன் என்பதைப் புலவர் அறியாதிருக்கும் பொருட்டேயாகும்.