பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

புலவரும் புலவர் சுற்றமும் மான் தசையினை யுண்டு மகிழ்ந்தனர். உணவுகொண்ட இப்புலவர்க்கும் புலவர் சுற்றத்திற்கும் நீர் வேட்கை மிக்கிருந்தமையால் மலையினின்று கீழே இழி தரும் அருவி நீரை அருந்தி, நீர்வேட்கையையும் போக்கிக்கொண்டனர். உண்ண உணவும், பருக நீரும் உதவிய கண்டீரக் கோப்பெரு நள்ளி புலவரை அண்மி “ஐய! யான் இது போது காட்டகத்து உள்ளேன், நாட்டகத்து இல்லேன். ஆகவே, நும் உள்ளம் மகிழ உதவுவதற்குரிய அணிகலன்கள் என்னிடம் இப்பொழுது இல்லை என்றாலும், உம்மை வெறுங் கையினராய் அனுப்புதற்கு எனக்கு விருப்பமின்று. ஆகவே, இதோ, இம்முத்தாரத்தைப் பெறுக. யான் செய்வது தினைத் துணைய தானமே யானாலும், உம்போல்வார் பனைத்துணையாகக் கொள்வர் என்னும் எண்ணங்கொண்டே இதனை ஈகின்றேன்; ஏற்றருள்க,” என்று வினயமாகக் கூறியீந்தனன். நள்ளி கொடுத்தது தரளமாலை என்றாலும், மிகுதியாகக் கொடுத்தற்கு இல்லையே என்று இவன் எண்ணியதை நாம் நினைக்கும் போது, இவனுக்கு ஈவதில் எத்துணை இன்பம் இருந்தது என்பது தெற்றெனத் தெரிகிறது அன்றோ ? நித்திலக் கோவையை ஈந்ததோடு அல்லாமல், தன் முன்கைக் கடகத்தையும் கொடுத்து இன்புற்றான். உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் வள்ளியோன் இவன் என்பதில் ஐயம் என்ன இருக்கிறது ?

இங்ஙனம் ஈந்த வள்ளலை நோக்கிப் புலவர் பெருமான், ‘ஐயா நீர் யாரோ? நும் பெயர் என்னவோ? நும் வாழ் இடம் எதுவோ?’ என்று உசாவினன் இத்துணை வினாக்களுக்கும் கண்டீரக்