பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோப்பெருநள்ளி யாதொரு விடையும் ஈயாது சென்றனன், இவ்வாறு இவன் சென்றது இவனுக்கிருந்த செருக்கன்று. தான் செய்த தருமம் பிறர் அறிதல் கூடாது என்பதற்கே யாகும். ஆனால், புலவர் மனம் மட்டும் ஓய்ந்தபாடில்லை. தாம் புறப்பட்டுச் சென்ற செல்லாறுதோறும் கண்டாரை யெல்லாம் தமக்கு ஈந்தவன் செயல்கள் அனைத்தையும் செப்பிக் கேட்டுக்கொண்டே செல்ல, இத்துணை ஈகைப் பண்பு வாய்ந்தவன், நள்ளியைத் தவிர்த்துப் பிறர் எவரும் இருக்க இயலாது, ஆகையால் புலவரைக் கண்டவர்கள் எல்லாம், “தோட்டி மலைக்குத் தலைவனான நள்ளி தான் உமக்கு இத்துணை உபசரணை செய்து உதவியவன்” என்று கூறக் கேட்டுப் புலவர் இவனது ஈகைக்குணத்தைப் பெரிதும் பாராட்டுவாரானார். ஈகையாளன் என்றால் இவ்வாறு அன்றோ இருக்க வேண்டும் ! இதனால் நள்ளி செய்த நன்கொடை யாவும் புகழுக்காகவோ புண்ணியத்திற்காகவோ செய்யப்பட்டவை அல்ல, என்பதன்றோ தெரியவருகிறது? வாழ்க அவன் கொடை ; வளர்க அவன் புகழ்.

கண்டீரக் கோப்பெருநள்ளி பெருந்தலைச் சாத்தனாரால் பாராட்டப்பட்ட முறை வியந்து பேசுதற்குரியதாகும். ஒருமுறை நள்ளியின் இளவலான இளங்கண்டீரக்கோவும், இளவிச்சிக்கோவும் ஒருங்கே வீற்றிருந்தனர். அவ்வமயம் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் அவண் வந்துற்றனர். அங்ஙனம் வந்தவர், இருவரையும் ஒருசேரக் கண்டனர். என்றாலும், நம் நள்ளியின் இளவலான இளங்கண்டீரக்கோவை மட்டும் அன்பு காரணமாக