பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

அதிகமானது பகைவர்க்கு ஒளவையார் அறிவுறுத்தல்

அதிகமான் போரில் தனிப்பட்ட முறையில் வீரங் தோன்றப் பொருபவன். இவன் கைப்பட்டவர் தப்புதல் அரிது. இதனை ஒளவையார் பன்முறை கண்டுள்ளார். ஆதலின், ஒரு முறை இவனோடு பொர முனைந்து நின்ற வீரர்களை நோக்கிக் கூறிய கூற்றுக்கள் எதிரிகள் வீணே பொருது இறக்க நேரிடுமே என்ற இரக்கந் தோன்ற இயம்பப்பட்டனவாகத் தோன்றும். ஒளவையார் அவ் வீரர்களைப் பார்த்து, ஓ வீரர்களே ! போர்க்களம் புகுதலை ஒழியுங்கள். எங்கள் தலைவன் அதிகமான் நெடுமான் அஞ்சி வன்மையும் அஞ்சாமையும் ஒருங்கே படைத்தவன். அவன் வன்மைக்கு உவமை கூறின், ஒரு நாளைக்கு எட்டுத் தேர்செய்யவல்ல அத்துணைத் தேர்ச்சிபெற்ற தச்சன், ஒரு திங்கள் வரை செய்த உருளை எத்துணை உறுதியும், திண்மையும் உடையதாய் இருக்குமோ, அத்திண்மையையும் உறுதியையுமே உவமையாகக் கூறலாம். நீங்கள் எப்படிப்பட்ட வீரமும், தீரமும் உடையவர்களானலும், உங்கள் போர் அணியும், தூசிப் படையும் எங்கள் அதிகமான் முன்பு காற்றிடைப்பட்ட பஞ்சேயாகும். ஆகவே, எம் தலைவன் உங்களைக் காணுதற்கு முன் களத்தைவிட்டுச் செல்லுங்கள். அவன் கூரிய வேலைத் தாங்கியவன். அவன் மார்பகம் பூணணிந்து பொலிவுடன் பரந்து விளங்குவது. அவன் தோள் முழவுபோலத் திரண்டு உருண்டு காணப்படுவது.