பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிட்டியது. அதிகமான் தகடூர்புக்குப் போரிடாது ஒளிந்திருந்தனன். சேரனும், காரியும் தகடூரை முற்றுகையிட்டனர் ; அவ்வமயம் ஔவையார் அதிகமானிடம் சென்று அவன் ஒரு தனிப் பெரு வீரனாக இருந்து போர்புரியாது வாளா இருத்தலைக் கண்டு அவனை ஊக்கிப் போரிடச் செய்ய வேண்டுமென, “அஞ்சி! புலி சீரின் புல்வாய் எதிர் நிற்குமோ ? ஞாயிறு கீழ்த்திசை யெழின் இருள் எதிர்த்து நிற்குமோ ? இவை நடவா அல்லவோ? போய் நீ எதிர்த்து நிற்பாயாக! உன்னுடன் எதிர்த்து நிற்கும் பகைவரும் உளரோ?” என்று ஊக்கப்படுத்தினர். அதிகமான் அந்த மொழிகளைக் கேட்டதும் மிகுந்த வீரத்துடன் போர்புரிந்தனன். அப்போரில் அவன் முகத்திலும் மார்பிலும் கழுத்திலும் பட்ட புண்கள் அனந்தம். இவனால் வெட்டுண்டவரும் பலர். இறுதியில் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை விட்ட அம்பு அதிகமானது நெஞ்சைப் பிளக்க, அதிகமான் அமரர் உலகம் புக்கனன்.

அதிகமானின் பிரிவும் புலவர்கள் ஆற்றாமையும்

அதிகமான் இறந்தனன். இவனது இறப்பு புலவர்களின் உள்ளத்தை உருக்கியது. அதிலும் ஔவையார் உற்ற துயருக்கு அளவே இல்லை. ஏனெனில், ஒளவையாரை அதிகமான் அதிகமாக நேசித்தவன்; ஔவையார் தன்னிடம் வந்து தங்கிய காலத்தில், அவ்வம்மையாரை எளிதில் பிரிய மனமற்றவனாய்ப் பரிசில் ஈந்தால் உடனே சென்று

சி.ச,-5