பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுவர் என்ற எண்ணத்தனாய்ப் பரிசில் கொடாது நீட்டித்தனன். இவனுடன் அப்பொழுதுதான் ஒளவையார் பழகுகின்றனர் ஆதலின், அவன் உள்ளக்கிடக்கையை உணராதவராய், “தம்மைச் சிறிதும் மதியாது பரிசில் தந்து பெருமைப் படுத்தா தொழிந்தனன்,” என்று, அதிகமானின் வாயில் காவலனை நோக்கி, “என்போன்ற பரிசில்மாக்கட்குத் தடை கூறாது வழிகாட்டும் வாயிலோயே! நின் தலைவன் நெடுமான் அஞ்சி என் தரம் அறிந்திலனோ? பரிசில் ஈய ஏன் தடைப்படுத்தினன் ? இதோ யான் புறப்படுகின்றனன். என் போன்றவர்க்கு எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறு, இதனை நின் தலைவனுக்கு அறிவிக்க,” என்ற காலத்து அவ்வாயிலோனும் தன் தலைவனுக்கு ஔவையார் கூற்றினை அறிவித்தமாத்திரத்து ஔவையார் அவா அடங்க உதவினன். அவ்வுதவி பெற்ற ஔவையார் அப்பொழுது பாடிய பாடல் அரிய கருத்துடைய பாடலாகும். ஔவையார் தம் நெஞ்சினை நோக்கி, “நெஞ்சகமே! நீ தவறாக அதிகமானை எண்ணிவிட்டனை. அதிகமான் முதல் நாள் சென்று காணும்போது எவ்வளவு அன்புடன் ஏற்று உபசரிப்பனோ அதுபோலவே பல நாள் தொடர்ந்து செல்லினும் முதல் நாள் போன்றே முகமலர்ச்சியுடன் வரவேற்கும் இயல்பினன். தனித்து யான் சென்றபோது மட்டுமே இங்ஙனம் நன்முகன் காட்டி நல்வரவேற்பு அளிப்பன் என எண்ணாதே. யான் பலரோடு சென்றாலும், அவர்களுக்கும் என்னிடம் காட்டும் அன்பினையே காட்டி