பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

முழுமைக்கும் உதவவல்ல வித்தினையே குற்றியுண்ணும் மதியிழந்த உழவன் போலப் பலர்க்கும் பயன்படும் அதிகமானைக் கொன்றனையே. இது முறையோ ? இவன் இறப்பு எங்கட்கு மட்டும் துயர் அளித்தது என்று எண்ணாதே. உனக்கும் இவனது பிரிவு துயரம் தருவதன்றோ ? இவன் ஒருவன் உயிருடன் இருப்பின், இவனது பகைவர்கள் எல்லோரையும் இவன் கொல்ல , நீ உண்டு மகிழலாம் அன்றோ ? அது போய் நீ என் செய்வாய் ?” என்று அதிகமானுடைய போர் வன்மையையும் கார் அன்ன வழங்கும் கைவண்மையையும் ஒருங்கே புகழ்ந்தார்.

அதிகமான் இறந்ததனால் பொய்மை புகலாப் புலவர் நெஞ்சங்கள் துடித்தன; வாடி வருந்தின. ஆயினும், என்? அதிகமான் நெடுமான் அஞ்சி, துஞ்சிப் போயினன். என்றாலும், இவனுடைய பரு உடல் அழிந்துபோவதே அன்றி, இவனது நுண்ணுடலான புகழுடல் போயதோ ? இன்று. அது குன்றின் மேல் இட்ட குலதீபம்போல் அணையாது விளங்கிக் கொண்டிருக்கிறது. உடல் எடுத்தாலும் இவ்வாறன்றோ எடுத்தல் வேண்டும்.