பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



7. பேகன்
கொடை மடமும் படை மடமும்

தண்டமிழ் மொழியில் கொடை மடம், படை மடம் என இரு பெருந் தொடர்கள் வழங்கி வருகின்றன. அவற்றுள் படைமடமாவது எதிரில் நிற்க இயலாமல் புறமுதுகுகாட்டிப் போர்க்களத்தினின்று இரிந்தோடும் வீரன்மீதோ, அன்றி ஆயுதமின்றி வெறுங்கையினனாய் நிற்கும் வீரன்மீதோ, வீரப்பண்பு இல்லாதார் மீதோ, புண்பட்டார்மீதோ, மூத்தார் மீதோ, இளையார் மீதோ, போர் செய்தற்குச் செல்லுதலாகும். இப்படிச் சென்று படை மடம்பட்ட பார்த்திபர்களோ, வீரப்பெருமக்களோ நம் செந்தமிழ் நாட்டில் இருந்திலர். ஆனால், கொடை மடம்பட்ட கொற்றவர் நம் நற்றமிழ் நாட்டில் இருந்துளார். கொடை மடமாவது தமக்கு அமைந்த பிறவிக் குணமாகிய கொடைக் குணத்தால் அறியாமைப்படுதலாகும்! தம்மை அணுகிக் கேட்டற்கு இயலாதவையான அஃறிணைப் பொருள்களிடத்தும் அன்புகாட்டி, இன்னது கொடுத்தல் இதற்குத்தகும் என்றுகூடச் சிந்தியாமல், தம் உள்ளத்தின் போக்குக்கு இயைய ஈவதாகும். ஞானாமிர்தம் என்னும் நூல், கொடை மடம் என்னும் தொடருக்குப் பொருள்காண்கையில், அகாரணத்தால் கொடைகொடுத்தல் என்று கூறுகிறது. திவாகரம் என்னும் நூல், வரையாது கொடுத்தலாகும் என்று விளக்குகிறது. எவ்வாறு பொருள் காணினும், கொடைமடம் என்பது கொடுக்குங்கால்