பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

பெரும் பேகன் ஆவான். ஆகவே, இவனும் மலை நாட்டு மன்னனாவன். மலை நாட்டு மன்னனே யானாலும், இவன் வாழ்ந்த ஊர் நல்லூர் என்று நவிலப் பெறும். இவன் யாதோர் அடைமொழியுமின்றி வெறும் பேகன் என்றும் கூறப்படும் பெருமை பெற்றவன்.

மயிலுக்குப் போர்வை ஈதல்

இவன் கொடை, கல்வி, அறிவு, ஆண்மை ஆகியவற்றில் தலைசிறந்தவன். இவனது கொடைத் திறனும் படைத்திறனும், ஆள்வினையுடைமையும் கண்டே கபிலர், வென்பரணர், அரிசில் கிழார், பரணர், பெருங்குன்றூர்க் கிழார் முதலானவர்கள் பாடும் பீடுபெற்றவன். இத்தகையோனுக்கு வாழ்க்கைத் துனைவியாக அமைந்தவள் கண்ணகி என்னும் காரிகையாவாள் ; அவள் மாசிலாக் குலத்து வந்தவள் ; வருவிருந்து உவப்ப ஊட்டும் நேசம் மிக்கு உடையவள் ; கொழுநன் நினைப்பு அறிந்து ஒழுகுபவள் ; திண்கற்பும் வாய்ந்தவள். இங்குக் குறிப்பிடப்பட்ட கண்ணகி என்பாள், கோவலனுக்கு இல்லக்கிழத்தியாக வாய்ந்த ஏந்திழையல்லள். அவள் வேறு. இவள் வேறு. இன்னோரன்ன பெண்மைக்குரிய இயல்புடையாளோடு இல்லறத்தை இனிது நடத்தி வரலானான் பேகன்.

பேகன் வாழ் இடம் மலைப்பாங்கர் அன்றோ ? அம்மலைப்பக்கல் கண்கொள்ளாக் கவின் பெருங்காட்சி நிறைந்தது. இயற்கைக் குடிலாக இலங்க வல்லது. இவ்விடத்து இயற்கை எழிலை அடிக்கடி பேகன் கண்டு இன்புறுவதுண்டு. ஒருநாள் பேகன்