பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விறலியரும் கபிலரும்

விறலியர் என்பவர் தம் தொழில்திறனை விறல் படக்காட்டி நடித்துப் பரிசில் பெற்று உயிர் வாழ்பவர். அத்தகைய குடியினள் ஒருத்தி தன் எதிரே வரக்கண்ட கபிலர், அவள் வறுமைக்கோர் உறைவிடமாக அமைந்தவளாய், நல்ல அணிகலன்கள் இன்றி நல்லாடை இன்றி இருத்தலையுங் கண்டு இரக்கங்கொண்டு, அவட்கு இவை அனைத்தும் கிடைக்க வேண்டுமென்ற நல்லெண்ணம் வாய்க்கப் பெற்றுத் தாம் பெற்ற இன்பம் இவளும் பெற்று இன்புடன் வாழவேண்டுமென்ற கருத்துடையவராய், அவளை நோக்கி, "ஒளிபொருந்திய நெற்றியையுடைய விறலியே! நீ வேள் பாரியை அணுகினால், அவன் உனக்கு நல்ல செம்மை வாய்ந்த அணிகலன்களை அளிப்பன். அவன் மலையினின்று இழியும் நீரினும் மென்மைத்தன்மை வாய்ந்தவன் ; கொடுத்தற்கு மறான். அறிவிலரேனும், அறிவுடை யரேனும், அவனை அடைந்து கேட்டால் இல்லை என்னாது ஈயவல்லவன். அவன் வாழ் இடம் பறம்பு. இப்பறம்பு நல்ல சந்தன மரங்களைக் கொண்டது. அச்சந்தன மரங்களே அப்பறம்பு மலையில் வாழும் குறத்தியர்கள் அடுப்பெரிக்கும் கட்டைகள் ஆகும். அப்படி எரிப்பதனால் ஏற்படும் புகை அம்மலைப்பாங்கரில் வளர்ந்துள்ள வேங்கைமரங்களில் சூழ்ந்து காணப்படும். ஆகவே, அம்மலையிடத்துச் சந்தன மரமும், வேங்கைமரமும் தவிர்த்து ஏனைய மரங்கள் இருக்கமாட்டாத அப்பறம்பு நாட்டில் இவ்வட்டில் புகையே அன்றி அடுபோர்ப் புகை காணப்படல் அரிது. அத்தகைய பறம்பு மலைகளையும் கூறுபடுத்திக் கூறுபடுத்திப் பரிசிலர் பலர் பாடிப் பெற்றுச்