உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

சடுகுடு ஆட்டம்


முடியாதவாறு தடுக்க வேண்டும். அவரைப் பயப்படுத்தி, கோட்டை மிதிக்காதவாறு செய்வதில் வெற்றி கண்டால், அவர் ஆட்டமிழந்து விடுவாரல்லவா? ஆகவே, அத்தகைய படை முயற்சியை எல்லா ஆட்டக்காரர்களும் ஒற்றுமையாக சேர்ந்து செய்ய வேண்டும்.

2. முன்னாலே தடுக்க முயற்சித்தும், அவர் பாடித் தொடும் கோட்டைத் தொட, தன் காலை நீட்டும் பொழுது, காத்திருந்தபடி திடீரென்று ஒருவர் காலைப் பிடிக்கவும், அதே சமயத்தில் மற்றவர்கள் வந்து உடலைப் பிடித்துவிடவும் என்ற முறையில் ஆளைப் பிடித்திட வேண்டும். இதில் ஒற்றுமையாக, காலம் தாழ்த்தாமல் செயல்பட வேண்டும். இதை வேகமாக, விறுவிறுப்புடன், திடீர் பாய்ச்சலில் செய்ய வேண்டும்.

3. காலைப் பிடித்து இழுத்து விடுகின்ற ஆட்டக்காரர்களே, ஆடுகளப் பக்கவாட்டில் (Side) நின்று ஆட வேண்டும். இருபுறமும் இந்த ஆற்றல் உள்ளவர்கள் நிறுத்தப்படுவது சிறந்த ஆட்ட அமைப்பாகும்.

4. ஆற்றல் குறைந்த அல்லது பலவீனமுள்ள ஆட்டக்காரர்களை நடுவிலே நிறுத்திட வேண்டும்.

5. பாடித் தொடும் கோட்டருகில் அல்லது நடுக் கோட்டுக்கு அருகில் ஆளைப் பிடிக்க முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு பிடிக்கும் நிலை ஏற்பட்டால், அப்படியே ஆளை அலாக்காகத் துக்கி விடுகின்ற தன்மையில் சூழ்நிலை அமைந்தால்தான் பிடிக்க வேண்டும். வீணாகப் பிடி நழுவுகின்றவாறு பிடிக்கும் முயற்சியை (Loose catch) எப்பொழுதும் தொடரக்கூடாது.